Press "Enter" to skip to content

தேர்தல் பத்திரங்களை எதிர்த்த காங்கிரஸ், திமுக போன்ற எதிர்க்கட்சிகள் அதன் மூலம் பணம் பெற்றது சரியா?

பட மூலாதாரம், Getty Images

தேர்தல் பத்திரங்களை இந்திய உச்ச நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறித் தடைசெய்திருக்கும் நிலையில், அதனை எதிர்க்கும் கட்சிகள் அந்த முறையைப் பயன்படுத்தி பணம் பெற்றது முறையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

மத்திய அரசின் தேர்தல் பத்திர திட்டத்தின் செல்லுபடித் தன்மை குறித்த வழக்கை விசாரித்துவந்த இந்திய உச்ச நீதிமன்றம், அது அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது எனக் கூறி, அதனைத் தடைசெய்துள்ளது.

தேர்தல் பத்திரத் திட்டம் எனப்படும் Electoral Bonds திட்டம் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இந்திய நிறுவனமும் தேர்தல் பத்திரங்களை வாங்கி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பத்திரங்களை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் சில கிளைகளில் மட்டுமே பெற முடியும். இந்தப் பத்திரங்களை ரூ. 1,000, ரூ. 10,000, ரூ. 1,00,000, ரூ. 10,00,000, ரூ. 1,00,00,000 ஆகிய மதிப்புகளிலோ, அவற்றின் மடங்குகளிலோ வாங்கி அரசியல் கட்சிகளுக்கு அளிக்க முடியும்.

இந்த தேர்தல் பத்திரங்களில் வாங்கியவர் பெயர் இடம்பெறாது. இந்தப் பத்திரங்களை வாங்குபவர்கள், 15 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்ட, கடந்த தேர்தலில் குறைந்தது ஒரு சதவீத வாக்குகளையாவது பெற்ற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே அதனை வழங்க வேண்டும்.

ஒவ்வொரு வருடத்திலும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் தலா பத்து நாட்களுக்கு இந்தப் பத்திரங்களை வங்கிக் கிளைகளில் வாங்க முடியும். இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் வருடங்களில் கூடுதலாக 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். தாங்கள் பெறும் பத்திரங்களை எஸ்பிஐ வங்கிக் கிளைகளின் மூலம் அரசியல் கட்சிகள் பணமாக்கிக் கொள்ளலாம்.

தேர்தல் பத்திரங்கள்

பட மூலாதாரம், Getty Images

கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

இந்தத் திட்டத்தின் கீழ் ஜனவரி 2018 முதல் ஜனவரி 2024 வரை 16,518 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் பெறப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலான நிதி மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கே கிடைத்ததாக கடந்த சில ஆண்டுகளில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் எந்த தனி நபர் அல்லது நிறுவனம் பணம் அளித்தது என்பது தெரியாது என்பதால், இந்தத் திட்டம் பண மோசடி செய்வதற்குப் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

இதில் வேறு ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. அதாவது எஸ்பிஐ வங்கி பொதுத் துறை வங்கி என்பதால், அதன் தகவல்களை அரசு பெற முடியும் என்ற நிலையில், பெரிய நிறுவனங்கள் எதிர்க் கட்சிகளுக்கு பணம் அளிக்கத் தயக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு. தவிர, இந்த பத்திரங்கள் மூலமாக கிடைக்கும் பணத்தை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளுக்குத்தான் பயன்படுத்தும் என்பதற்கு எந்த உத்தரவாதமோ, கண்காணிப்போ கிடையாது. ஆகவே, இந்தப் பத்திரங்களின் மூலம் கூடுதலாக பணத்தைப் பெறும் கட்சி, அந்தப் பணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தப் பத்திர முறையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இந்த முறையைத் தடைசெய்துள்ளது.

இந்த முறை அமல்படுத்தப்பட்டபோது, எதிர்க் கட்சிகள் கடுமையாக இதனை எதிர்த்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறையின் மூலம் பணத்தைப் பெறப் போவதில்லை என்று அறிவித்தது. மேலும் இதனை எதிர்த்து வழக்குத் தொடுத்தவர்களுடனும் இணைந்துகொண்டது.

தேர்தல் பத்திரம் மூலம் எந்தக் கட்சி எவ்வளவு நிதி பெற்றது?

தேர்தல் பத்திரங்கள்

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசு 2017ம் ஆண்டு கொண்டுவந்த ஒரு நிதி மசோதாவின் மூலம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வருமான வரிச் சட்டம், மைய கட்டுப்பாட்டு வங்கிச் சட்டம், நிறுவனம் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளப்பட்டு, இந்த தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்தத் தருணத்தில் மைய கட்டுப்பாட்டு வங்கி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இது தவறான முன்னுதாரணம் என்பதோடு, பத்திரங்களை வெளியிடும் பொறுப்பை வேறு வங்கிகளுக்கு அளிப்பது மைய கட்டுப்பாட்டு வங்கியின் அதிகாரத்தைக் குறைக்கும் விதமாகவும் அமைந்துவிடும் என்று குறிப்பிட்டது.

தேர்தல் ஆணையமும் இதனை எதிர்த்தது. இது வெளிப்படைத்தன்மையில்லாத, பிற்போக்குத்தனமான நடவடிக்கை எனக் குறிப்பிட்டது. இருந்தபோதும் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் இந்திய அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த கணக்குகளின்படி 2018 முதல் 2013வரை தேர்தல் பத்திரங்களின் மூலம் கிடைத்த சுமார் 16,518 கோடி ரூபாயில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியே பெரும் பகுதியைப் பெற்றிருக்கிறது. அக்கட்சிக்கு தேர்தல் பத்திரங்களின் மூலம் 6,565 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 1,123 கோடி ரூபாய் இந்தப் பத்திரங்களின் மூலம் கிடத்திருக்கிறது.

திரிணாமுல் காங்கிரஸ் 1,093 கோடி ரூபாயையும் பிஜு ஜனதா தளம் 774 கோடி ரூபாயும் தி.மு.க. 617 கோடி ரூபாயையும் பெற்றுள்ளன. பாரதிய ராஷ்ட்ரிய சமிதி 384 கோடி ரூபாயையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 382 கோடியையும் பெற்றிருக்கிறது. தெலுங்கு தேசம், சிவசேனா, ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை மிகச் சிறிய தொகையை இதன் மூலம் பெற்றிருக்கின்றன. அ.தி.மு.க. வெறும் ஆறு கோடி ரூபாயை இந்தப் பத்திரங்களின் மூலம் பெற்றிருக்கிறது.

தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்றது ஏன்?

தேர்தல் பத்திரங்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலையில், இந்தப் பத்திரங்களை எதிர்த்த எதிர்க்கட்சிகள் இதன் மூலம் தேர்தல் நிதி பெற்றிருப்பது குறித்து பலரும் கேள்வியெழுப்பிவருகின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியும் தி.மு.கவும் இந்த பத்திரங்களின் மூலம் பணம் வாங்கியது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.

ஆட்டத்தின் விதிகளை மாற்றிவிட்டு, அந்த விதிப்படி ஆடக்கூடாது என்று சொல்வது சரியான வாதமல்ல என்கிறார் அகில இந்திய காங்கிரஸ் குழுயின் உறுப்பினரான ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

“அவர்கள்தான் விதியை மாற்றினார்கள். விதி அப்படி மாற்றப்பட்ட பிறகு ஒன்று அந்த விதிகளின்படி ஆட்டத்தை ஆட வேண்டும். இல்லையென்றால் ஆட்டத்திலிருந்து விலகிவிட வேண்டும். காங்கிரஸ் போன்ற ஒரு மாபெரும் இயக்கம் அப்படி விட்டுவிட முடியாது. இந்த விதிகளின்படி மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணத்தைப் பெற முடியும் எனச் சொல்லிவிட்ட பிறகு, வேறு என்ன செய்வது? இல்லாவிட்டால் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணம் பெற முடியாது. அந்த சமயத்திலேயே வழக்குத் தொடரப்பட்டாலும் இப்போதுதான் அந்த முறை தவறு எனத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. ஆக, அதுவரை காங்கிரஸ் கட்சி தேர்தலைப் புறக்கணிக்க முடியுமா?

இந்த விவகாரம் முழுக்கமுழுக்கத் தவறு என நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. ஆகவே, கடந்த ஐந்தாண்டுகளாக நடந்த தவறுக்கு யார் பொறுப்பேற்பது? நிதியமைச்சரோ, பிரதமரோ ராஜினாமா செய்வார்களா? இந்த விதியைக் கொண்டுவந்த பா.ஜ.கவிடம் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, எல்லா ஊடகங்களும் எதிர்க்கட்சிகளைக் கேள்வி கேட்கின்றன” என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

மம்தா பானர்ஜி இந்த முறையின் மூலம் நிதியைப் பெற்றதால்தான் மேற்கு வங்கத்தில் அந்தக் கட்சியால் நிலைத்து நிற்க முடிகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தனக்கு வந்த நிதியில் 90 சதவீதத்திற்கு மேலான நிதியை தேர்தல் பத்திரங்களின் மூலம் தி.மு.க. பெற்றிருப்பது குறித்து கேள்வியெழுப்பினார்.

ஆனால், யார் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக விதியைக் கொண்டுவந்தார்களோ, அவர்களைக் கேள்வியெழுப்பாமல் எதிர்க்கட்சிகளைப் பார்த்து கேள்வியெழுப்புவது தவறு என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

“பல அரசியல் கட்சிகள் தேர்தல் முறையில் சீர்திருத்தம் வேண்டும் எனக் கோரி வருகின்றன. அதற்காக, அந்தச் சீர்திருத்தம் வரும்வரை தேர்தலில் போட்டியிடாமல் இருக்க முடியுமா? தேர்தலில் போட்டியிடத்தான் செய்வார்கள். அதற்காக, அந்த முறையில் பிரச்சனை இல்லை என்று அர்த்தமாகாது. அதேபோல, மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்படுவதை தி.மு.க. ஏற்கவில்லை. ஆனால், தி.மு.கவின் முதலமைச்சர்கள் அனைவரும் ஆளுநர்களால்தான் பதவியேற்றுக் கொள்கிறார்கள். இதை முரண்பாடாகப் பார்க்க முடியாது.

இதுதான் ஒரே ஒரு வகையான நிதி பெறும் வழிமுறை என்றால் என்ன செய்வது. ஒரு விஷயம் நடக்கும்போது, அதை சார்ந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது. உதாரணமாக ஆளுநர் பதவி தேவையில்லை என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. ஆனால், தி.மு.க. தொடர்ந்து ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்து தான் பதவியேற்கிறார். அது ஒரு முரண்பாடு அல்ல. இதெல்லாம் இந்த அமைப்பில் இருக்கக்கூடிய நிஜங்கள். கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெற இதுதான் ஒரே வழி எனச் சொன்ன பிறகு, எந்தக் கட்சியால், அதனைவிட்டுவிட முடியும்?” என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

தேர்தல் பத்திர முறைக்கு வெளியில் இருந்து நிதியைத் திரட்ட முடியாதா? “மத்திய அரசு எதனை அங்கீகரிக்கிறதோ, அதை நோக்கித்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் செல்லும். இது இந்தியாவில் மட்டும் நடக்கக் கூடிய விஷயமல்ல. உலகம் முழுக்கவே அப்படித்தான் நடக்கிறது. மத்தியில் இருக்கும் அரசைப் பகைத்துக் கொண்டு எந்த நிறுவனமும் வேறுவகையில் செயல்பட முன்வராது” என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »