Press "Enter" to skip to content

பிகாரில் ராகுல் – தேஜஸ்வி ஜோடி பாஜக கூட்டணிக்கு சவாலாக இருக்குமா?

பட மூலாதாரம், ANI

கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16), காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவும் ‘பாரத் ஜோடோ நீதி பயணத்தில்’ (பாரத் ஜோடோ நியாய் யாத்ரா) பங்கேற்றார். பாரத் ஜோடோ நீதி பயணத்தின் போது ராகுல் காந்தி இரண்டாவது முறையாக வியாழக்கிழமை பிகார் சென்றடைந்தார்.

கடந்த மாதம் அதாவது ஜனவரி மாதத்திலும் ராகுல் காந்தி பிகாரில் உள்ள சீமாஞ்சல் பகுதிக்கு இரண்டு நாட்கள் சென்றிருந்தார். அந்த நேரத்தில், ஜனவரி 29-ஆம் தேதி ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவும் ஜனவரி 30-ஆம் தேதி தேஜஸ்வி யாதவும் அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

வெள்ளிக்கிழமை ரோஹ்தாஸில் ​​ராகுல் காந்தியின் கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தடுப்பதற்காக அமலாக்க இயக்குநரகம் தன்னை மணிக்கணக்கில் விசாரணைக்காக வைத்திருந்ததாக தேஜஸ்வி யாதவ் கூறினார்.

பிப்ரவரி 16-ஆம் தேதி ராகுல் காந்தியின் இந்த பயணத்தில் முதல்முறையாக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் முக்கிய தலைவர் ஒருவர் பங்கேற்றுள்ளார்.

பிகாரில் கடந்த மாதம் ஜனவரி 28-ஆம் தேதி மகா கூட்டணியில் இருந்து விலகி தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமார் இணைந்தார்.

இதனால், பிகாரில் வரும் மக்களவைத் தேர்தல் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு பெரும் சவாலாக இருக்கும்.

கடந்த வாரம், பிகார் சட்டமன்றத்தில் நிதிஷ் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, ​​பிகாரில் நரேந்திர மோதியை தடுப்பேன் என்று தேஜஸ்வி யாதவ் கூறியிருந்தார்.

தேஜஸ்விக்கு அதிகரிக்கும் அனுதாபம்

ராகுல் காந்தி

பட மூலாதாரம், BPCC

2020-ஆம் ஆண்டு பிகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. அக்கட்சி மாநிலத்தில் 75 இடங்களை வென்றது. பின்னர் நான்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் எம்.எல்.ஏ.க்களும் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்தனர்.

இதன் மூலம், லாலு பிரசாத் யாதவ் இல்லாமல் பிகாரில் தன்னையும் தனது கட்சியையும் வலுவாக வைத்திருந்தார் தேஜஸ்வி யாதவ்.

மூத்த பத்திரிகையாளர் சுரூர் அகமது கூறுகையில், “லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பிகாரில் உள்ள ஒரு பிரிவினரின் அனுதாபத்தை எப்போதும் பெற்றுள்ளனர். இஸ்லாமியர்கள், யாதவ் மற்றும் மண்டல் (ஓபிசி) ஆதரவாளர்களின் பிரிவினர்தான் லாலுவுடன் நிற்கிறார்கள்,” என்றார்.

லாலு தண்டிக்கப்பட்டபோது, ​​அவரது ஆதரவாளர்கள் அவருடன் நிற்பதைக் காண முடிந்ததாக அவர் கூறுகிறார். பிகாரில் இன்றுவரை பா.ஜ.க.வால் லாலுவை மட்டும் தோற்கடிக்க முடியாத அளவுக்கு பெரிய ஆதரவு இது. லாலுவை தோற்கடிக்க பா.ஜ.க.வும் ஐக்கிய ஜனதா தளமும் இணைய வேண்டும்.

உத்தர பிரதேசத்திலும் சமாஜ்வாதி கட்சியுடன் முஸ்லிம்-யாதவ் சமன்பாடும், மாயாவதியுடன் தலித்-பிராமண ஆதரவும் உள்ளது. இதையும் மீறி 1991-ஆம் ஆண்டிலேயே அங்கு பா.ஜ.க ஆட்சி அமைந்தது.

சுரூர் அகமதுவின் கூற்றுப்படி, பிகாரில் இந்த ஆதரவு இப்போது தேஜஸ்விக்கு உள்ளது. தேஜஸ்வியுடன் சாதி சமன்பாடு தவிர, இளைஞர்களின் ஒரு பகுதியும் அவருக்கு ஆதரவாக உள்ளனர். நிதிஷ் அடிக்கடி கூட்டணியை மாற்றுவதால் தேஜஸ்வி மீதான அவர்களின் அனுதாபம் அதிகரித்துள்ளது.

ஓட்டுநர் இருக்கையில் தேஜஸ்வி

தேஜஸ்வி யாதவ் - ராகுல் காந்தி

பட மூலாதாரம், BPCC

பிகாரில் எந்த கூட்டணிக்கும் தேஜஸ்வி யாதவ் பெரும் சவாலாக இருப்பார் என நம்பப்படுகிறது.

சுரூர் அகமது கூறுகையில், “தேஜஸ்வி ஒரு பழைய குதிரையையோ அல்லது சோர்வான குதிரையையோ சட்டமன்றத் தேர்தலில் எதிர்கொள்ளக்கூடும். அதேசமயம், மக்களவை தேர்தலில் ராகுலும் மோதியும் உள்ளனர். ஆனால், மோதிக்கு இது மூன்றாவது தேர்தல் என்பதால் அவருக்கும் இந்தத் தேர்தல் அவ்வளவு சுலபமாக இருக்காது,” என்றார்.

பிகாரில் எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறிய பிறகு, காங்கிரஸும் ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து மதச்சார்பற்ற வாக்குகள் மற்றும் முஸ்லிம் வாக்குகளைப் பிரிப்பதைத் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் 17 சதவீதத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் உள்ளனர்.

பிகாரில் தேர்தல் புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும், அம்மாநிலத்தின் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் எதிர்க்கட்சி கூட்டணியின் வெற்றிக்கு தேஜஸ்வி யாதவ் பெரிய பொறுப்பாக இருப்பார்.

காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தேஜஸ்வி மற்றும் ராகுல் சந்திப்பின் சிறப்புப் படத்தையும் தங்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளன. இதில் ராகுல் காந்தியும், தேஜஸ்வியும் ஒரே காரில் பயணிக்க, தேஜஸ்வி யாதவ் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துள்ளார்.

தேஜஸ்வி யாதவ் - ராகுல் காந்தி

பட மூலாதாரம், ANI

பிகாரில் காங்கிரஸின் பங்கு என்ன?

மூத்த பத்திரிகையாளர் நச்சிகேத நாராயண் கூறும்போது, ​​“பிகாரில் தேஜஸ்வி எதிர்க்கட்சிக்கு தலைமை தாங்குவார், காங்கிரஸ் கூட்டணி கட்சியாக செயல்படும் என்பதற்கான அடையாள புகைப்படம் இது. இதுமட்டுமின்றி, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் சமீபத்தில் நடந்தவற்றிலிருந்து பாடம் எடுத்து தேஜஸ்வி யாதவுக்கு காங்கிரஸ் அதிக முக்கியத்துவமும் மரியாதையும் அளித்து வருவதாக தெரிகிறது,” என்றார்.

தேஜஸ்வி யாதவ் மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவருக்குமே பிகாரில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஒரு பெரிய தேர்தல் பிரச்னையாக மாறும் என்ற உண்மையின் முக்கியத்துவம் தெரியும். பிகாரில் ராணுவத்தில் ‘அக்னிவீர்’ பிரச்னையை கிளப்பி, மத்திய அரசை ஓரம் கட்ட முயன்றார் ராகுல் காந்தி.

பிகார் இளைஞர்களும் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியுடன் உடன்படுவதாகத் தெரிகிறது. தொடர்வண்டித் துறை மற்றும் பிற அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பிரச்னையை எழுப்பி இளைஞர்களை தன்னுடன் இணைக்க ராகுல்காந்தி முயன்றார்.

பிகார் மக்கள் என்ன சொல்கிறார்கள்?

பிகார்

ஔரங்காபாத்தை சேர்ந்த பிங்கு குமார் கூறுகையில், “நாட்டில் மதம் ஒரு பிரச்னையாக மாறக்கூடாது. மதத்தின் பெயரால் பிரிவினையை விடுத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த அரசு பாடுபட வேண்டும். எம்பிஏ படித்தாலும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை” என்றார்.

பிங்குவுடன் இருக்கும் சில இளைஞர்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக புகார்கள் உள்ளன. தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தடை செய்ய வேண்டும் என்றும் எந்த கட்சியும் தேர்தலில் மதம் பற்றி பேசக்கூடாது என்றும் அவர் கூறுகிறார்.

ராகுல் காந்தியின் கூட்டத்திற்கு வந்த காங்கிரஸ் ஆதரவாளரான பேராசிரியர் விஜய் குமார், பிகார் இளைஞர்கள் இப்போது ராகுல் காந்தியுடன் இருப்பதாகக் கூறுகிறார். பிகாரின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு வீட்டிலும் நிதிஷ் குமார் குறித்து விவாதிக்கப்படுகிறது. நிதிஷ்குமார் எப்போது வேண்டுமானாலும் பக்கம் மாறுவார் என பிகார் மக்கள் கூறி வருகின்றனர்.

அதேநேரத்தில், பணவீக்கம், வேலைவாய்ப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு ஆகியவை பிகாரில் பெண்களுக்கு பெரிய பிரச்னைகளாக உள்ளன.

ராகுல் காந்தியின் கூட்டத்தில் கலந்துகொண்ட அமிதா, ஒவ்வொருவருக்கும் பிரச்னை இருப்பதாக நம்புகிறார். ராகுல் காந்தி அனைவரின் பேச்சையும் கேட்டு வருகிறார், அதனால் அவருக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருவதாக அவர் கூறுகிறார்.

ரோஹ்தாஸ் பகுதியில் விவசாயிகளுடன் ராகுல் காந்தி பேசியுள்ளார். அப்போது அவரிடம் விவசாயிகள் தங்களது பிரச்னைகளை தெரிவித்தனர். பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காதது மாநில விவசாயிகளுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. அதேசமயம், நிலம் கையகப்படுத்தியதற்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் பேசினர்.

பிகாரில் ‘இந்தியா’ கூட்டணியின் நம்பிக்கை

பிகார்

ஔரங்காபாத்தில் ராகுல் காந்தியைக் காண பெரும் கூட்டம் திரண்டிருந்தது. ரோஹ்தாஸில், தேஜஸ்வி முன்னிலையில், கூட்டத்தின் உற்சாகமும் அதிகமாகத் தெரிந்தது.

ஆனால், ராகுல் காந்தியும் தேஜஸ்வி யாதவும் எத்தனை பேரை கவர்ந்திழுப்பார்கள் என்பதை இந்த கூட்டத்தை விட தேர்தலில் அவர்கள் பெறும் வெற்றியே சொல்லும்.

தற்போது மாநிலத்தில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் ஒரு தொகுதி மட்டுமே எதிர்க்கட்சியிடம் உள்ளது. மாநிலத்தில் சீமாஞ்சல் பகுதியின் கிஷன்கஞ்ச் தொகுதி காங்கிரஸ் வசம் உள்ளது. 16 மக்களவை தொகுதிகள் ஐக்கிய ஜனதா தளத்திடமும் 17 பா.ஜ.க.விடமும் 6 லோக் ஜனசக்தி கட்சியின் இரு பிரிவுகளுடனும் உள்ளன.

தனது பாரத் ஜோடோ நீதி பயணத்தில், ராகுல் காந்தி பிகாரில் காங்கிரஸுக்கு நம்பிக்கையான பகுதிகளுக்கு செல்ல முயன்றார்.

ராகுல் காந்தி தனது பயணத்தின் போது, ​​சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் விவசாயிகளின் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது குறித்தும் குறிப்பிட்டுள்ளார். அதாவது, பிகார் வாக்காளர்களை பாதிக்கக்கூடிய ஒவ்வொரு பிரச்னையையும் தொடுவதே அவரது முயற்சி.

பிகாரில் எதிர்க்கட்சி கூட்டணியான ‘இந்தியா’வின் நம்பிக்கை சமீபகாலம் வரை காங்கிரஸ் வெற்றி பெற்று வரும் பகுதிகளில்தான் உள்ளது.

இது தவிர, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் செல்வாக்கின் கீழ் பல மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அதேசமயம், மாநிலத்தின் கடந்த சட்டமன்றத் தேர்தலில், இடதுசாரிக் கட்சிகளின் செயல்பாடும் சில பகுதிகளில் நன்றாகவே இருந்தது.

காங்கிரஸுக்கு ஆதரவான இடங்கள்

பிகார்

பட மூலாதாரம், ANI

சீமாஞ்சலைப் பற்றி பேசுகையில், கிஷன்கஞ்ச் தொகுதியில் நீண்ட காலமாக காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.

இது தவிர, கடந்த 2014-ஆம் ஆண்டு சுபால் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரஞ்சித் ரஞ்சன் வெற்றி பெற்றார். அதேசமயம், முஸ்லிம்-யாதவ் சமன்பாடு பூர்ணியா மற்றும் மாதேபுரா இடங்களிலும் நல்ல தாக்கத்தைக் வெளிப்படுத்தலாம்.

மிதிலாஞ்சலின் தர்பங்கா மற்றும் மதுபானி தொகுதிகளில் சரியான வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் எதிர்க்கட்சி கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சவாலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. கடந்த தேர்தலில் தர்பங்கா தொகுதியில் அப்துல் பாரி சித்திக்-ஐ ராஷ்டிரிய ஜனதா தளம் வேட்பாளராக நிறுத்தி தோல்வியடைந்தது.

2019-ஆம் ஆண்டில், தர்பங்கா தொகுதியில் காங்கிரஸின் கீர்த்தி ஆசாத் போட்டியிடுவது குறித்தும் பேசப்பட்டது.

கடந்த மக்களவை தேர்தலில், காங்கிரசின் மருத்துவர் ஷகீல் அகமது மதுபானி தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், கூட்டணியில், சுயேச்சையாக போட்டியிட்ட பிறகும், இரண்டாவது இடத்தில் இருந்த விஎஸ்ஐபியின் வேட்பாளரான ஷகீலுக்கு இந்த இடம் வழங்கப்பட்டது. ஷகீல் அகமது நல்ல வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருந்தார்.

ராகுல் காந்தி தனது பயணத்தின் போது சென்ற பிகார் பகுதிகளிலும் இடதுசாரி கட்சிகளுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. மீரா குமாரின் இடமாக சசாராம் இருந்துள்ளது, அதேசமயம் அவரது தந்தை ஜக்ஜீவன் ராம் இந்த பகுதியில் இருந்து காங்கிரசின் பெரிய தலைவராக இருந்துள்ளார்.

கைமூர், ஔரங்காபாத் ஆகிய பகுதிகள் 2020 சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் பல எம்எல்ஏக்கள் வெற்றி பெற்ற பகுதிகள்.

பிகாரில் பாஜகவுக்கு சவால்

காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம்

பட மூலாதாரம், BPCC

நச்சிகேத நாராயண் கூறும்போது, ​​“நிதிஷ் வந்த பிறகும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பிகார் எளிதானது அல்ல. வரும் மக்களவைத் தேர்தல் முடிவு, தேசிய ஜனநாயக கூட்டணி எந்த பிரச்னையை முன்வைத்துப் போட்டியிடுகிறது என்பதை பொறுத்தே அமையும். கடந்த முறை அக்கூட்டணி புல்வாமா பிரச்னையை முன்வைத்தது. அது வேலை செய்தது” என்றார்.

அயோத்தியில் ராமர் கோவில் விவகாரத்தில் கூட இந்த முறை பா.ஜ.க.வுக்கு அதிக நம்பிக்கை இல்லை, அப்படி இருந்திருந்தால் பா.ஜ.க.வுக்கு நிதிஷ் தேவைப்பட்டிருக்க மாட்டார் என்று அவர் நம்புகிறார். பிகாரில் வாக்குகள் துருவப்படுத்தப்படாவிட்டால், தேசிய ஜனநாயக கூட்டணி இங்கு கடும் சவாலை சந்திக்க நேரிடும் என்கிறார் அவர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பெரும்பாலான சிறு கட்சிகள் தென் பிகார் பகுதியில் இருந்து வந்தவை என்பது சிறப்பு. இவற்றில், கயா-நாளந்தா ஜிதன் ராம் மஞ்சியின் பகுதியாகக் கருதப்படுகிறது. அதேநேரத்தில், ரோஹ்தாஸ் மற்றும் ஔரங்காபாத் பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்ட கரகாட் மக்களவைத் தொகுதியிலிருந்து 2014-ஆம் ஆண்டு தேர்தலில் உபேந்திர குஷ்வாஹா வெற்றி பெற்றார்.

இத்தகைய சூழ்நிலையில், எதிர்க்கட்சிக் கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணியின் சிறிய கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்கொண்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு போட்டி அவ்வளவு சுலபமாக இருக்காது. இந்த பகுதிகளில் வெற்றி பெற, பா.ஜ.க தனது கூட்டணி கட்சிகளுக்கு முழு பலத்துடன் ஆதரவளிக்க வேண்டும்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »