Press "Enter" to skip to content

2020-2024 விவசாயிகள் போராட்டம் ஓர் ஒப்பீடு – நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை பாதிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சல்மான் ரவி
  • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடப்பதற்கான நாட்கள் வெகுதொலைவில் இல்லை. அதற்கான தேதிகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, புதிய அரசு இன்னும் 3 மாதங்களில் அமையலாம் என்று நம்பப்படுகிறது.

இதற்கு மத்தியில், இந்தியாவின் விவசாயிகள் மீண்டும் தங்களது வீரியமிக்க போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தேர்தலுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ள இந்த போராட்டம் பாஜகவிற்கு கடுமையான சவாலாக அமையுமா? என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் தலைதூக்கியுள்ளது.

அதே சமயம், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்திய விவசாய அமைப்புகள் எதுவும் தற்போதைய போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதில் பாரதிய கிஷான் யூனியன் மற்றும் அகில இந்திய கிஷான் சபாவும் அடங்கும். பாரதிய கிஷான் யூனியன் தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்குபெறவில்லை என்றும், அதே சமயம் அதை எதிர்க்கவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசியுள்ள பாரதிய கிஷான் யூனியனை சேர்ந்த ராகேஷ் டிகாயித், தேர்தலில் எந்த கட்சியை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பது குறித்து எங்கள் அமைப்புக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எங்களது அமைப்பின் நோக்கம் விவசாயிகளுக்காக போராடுவது மட்டுமே தவிர, தேர்தலுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார் அவர்.

பிபிசியிடம் தொலைபேசியில் பேசிய அவர், “ நாங்கள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக போராடி வருகிறோம். முதலில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து அதை திரும்பபெற கோரி போராட்டம் நடத்தினோம். தற்போது இதர கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த முறை சன்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது), பிகேயு (ஷாஹீத் பகத் சிங்), பிகேயு (ஏக்தா சித்துபூர்), கிசான் மஸ்தூர் மோர்ச்சா, பாரதிய கிசான் நௌஜவான் யூனியன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

பல்பீர் சிங் ராஜேவால் மற்றும் ஜக்ஜித் சிங் தலேவால் ஆகியோரின் பிகேயு பிரிவுகள் இந்த போராட்டத்திலிருந்து விலகி நிற்கின்றன.

விவசாயிகள் போராட்டம்

இந்த போராட்டத்தில் என்ன வேறுபாடு உள்ளது?

பிரபல எழுத்தாளரும் இந்துத்துவ சிந்தனையாளருமான ராஜீவ் துலி இதுகுறித்து கூறுகையில், இம்முறை நடைபெறும் இயக்கத்தில் பஞ்சாபின் விவசாய அமைப்புகள் மட்டுமே ஈடுபட்டுள்ளன, அதிலும் எல்லா அமைப்புகளும் இல்லை என்று தெரிவிக்கிறார்.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கு பஞ்சாப் அரசின் ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், இந்த போராட்டம் பாஜகவை பாதிக்குமா?

இதற்கு பதிலளித்த அவர், இதில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கு மத்திய அரசே இலக்கு. ஆனால், அதில் குறிப்பிடத்தக்க தாக்கம் எதுவும் இருப்பது போல் தெரியவில்லை என்கிறார்.

அதேசமயம் பிபிசியிடம் பேசிய மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா, தற்போது நடந்து வரும் போராட்டத்தை காங்கிரஸே தூண்டி விட்டுள்ளதாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “2014க்கு முன்பு வரை காங்கிரஸ் அரசு வரவு செலவுத் திட்டத்தில், விவசாயிகளுக்காக வெறும் 27,000 கோடியை மட்டுமே ஒதுக்கியது. ஆனால், தற்போதைய பாஜக அரசோ அதை ஐந்து மடங்கு உயர்த்தி 1,24,000 கோடியாக ஒதுக்கியுள்ளது” என்றார்.

மேலும் பேசிய அவர், தற்போதைய போராட்டம் அரசியல் நோக்கில் மக்களவை தேர்தலை குறிவைத்தே தொடங்கப்பட்டுள்ளது என்றும், காங்கிரஸே விவசாயிகளை தூண்டி விட்டுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாயிகள் போராட்டம்

வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அதிருப்தி

2020 போராட்டத்தை முன்னெடுத்த அகில இந்திய கிஷான் சபா தற்போதைய போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அதன் தலைவர் விஜூ கிருஷ்ணனிடம் இதுகுறித்து பேசினோம்.

பிபிசியிடம் பேசிய அவர், “13 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசும், பிரதமர் மோதியும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தனர். அதோடு சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் இயற்றப்படும் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குற்றவியல் வழக்குகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று உறுதி கொடுக்கப்பட்டது.” என்று கூறினார்.

மேலும், “ எம்எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்துவதற்கான உறுதியும் வழங்கப்பட்டது. அதே சமயம் போராட்டத்தின்போது, கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் பேசப்பட்டது. ஆனால், அதை செய்யவில்லை”

“அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றும் என 13 மாதங்களாக நாங்கள் காத்திருந்தோம். ஆனால், இன்னமும் நிலைமை அப்படியேதான் இருக்கிறது. எனவேதான் சில மாதங்களாக மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கும் தேர்தலுக்கு சம்பந்தமில்லை. விவசாயிகளின் பிரச்னை அரசியலில் இருந்து வேறுபட்டது.” என்று தெரிவித்துள்ளார் விஜூ கிருஷ்ணன்.

விவசாயிகள் போராட்டம்

அரசு தரப்பில் அறிவிப்பு ஏதும் வெளியாகுமா?

கடந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட பெரிய அமைப்புகள் எதுவும் தற்போதைய ‘டெல்லி சலோ’ இயக்கத்தில் கலந்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் அனைத்தும் மத்திய அரசின் ஆதரவு பெற்று இயங்குவது போல் தெரிகிறது என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் நிபுணருமான ஜெய்ஷங்கர் குப்தா.

மேலும், “தற்போதைய ‘டெல்லி சலோ’ இயக்கத்தை முன்னெடுத்து வரும் அமைப்புகள் அனைத்தும் பாஜகவோடு நெருக்கமானவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்கிறார் அவர்.

இந்த போராட்டத்தின் மூலம் விவசாயிகளுக்காக பெரிய அறிவிப்பு ஒன்றை அறிவித்து பாஜக தனது ‘ஆசிரியர் ஸ்ட்ரோக்’ உத்தியை பயன்படுத்தலாம் என்ற தனது கருத்தையும் அவர் வெளிப்படுத்துகிறார்.

இதற்கு உதாரணமாக, தேர்தலுக்கு சற்று முன்பாக மறைந்த சௌத்ரி சரண் சிங் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதையும் இதோடு தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைக்கிறார் அவர்.

விவசாயிகள் போராட்டம்

கிராமின் பாரத் பந்த்

இந்த முறை நடைபெறும் போராட்டத்தில் அனைத்து விவசாய அமைப்புகளும் கலந்து கொள்ளாததால், இந்த போராட்டம் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவது போல் தெரியவில்லை என்கிறார் ஜெய்சங்கர் குப்தா.

மேலும் பேசிய அவர், ஒரு மாநிலத்தில் ஒரு சில இயக்கங்களால் மட்டும் நடத்தப்படும் போராட்டத்தால், மற்ற மாநிலங்களில் தாக்கம் ஏற்படாது என்கிறார்.

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு இது பெரிய சவாலாக இருக்காது.

ஆனால், இந்துத்வா சிந்தனையாளரான ராஜிவ் துலி இதை மறுக்கிறார். மேலும், 60 வயதுக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு ரூ.10,000 ஓய்வூதியம் வழங்குவது எந்த அரசின் அதிகாரத்திலும் இல்லை என்கிறார் அவர்.

யார் விவசாயி என்பதே இங்கு பெரும் கேள்வியாக இருக்கிறது என்கிறார் அவர். பெரு முதலாளிகள் மற்றும் செல்வாக்கு நிறைந்தவர்கள் விவசாய நிலங்களை வாங்குகின்றனர்.

எனவே, “அவர்கள் அனைவரையும் விவசாயிகள் என்று அழைக்கமுடியுமா? அதற்கான அளவுகோல் என்ன? என்ற கேள்வியை முன்வைக்கும் அவர், அது குறித்த தெளிவே இங்கு இல்லை என்கிறார். சுப்ரியா சுலே மற்றும் ப.சிதம்பரம் ஆகியோரும் கூட விவசாயிகள் தான். எனவே, இதை அரசு ஆதரவில் நடக்கும் போராட்டம் என்று அழைப்பது உண்மைக்கு புறம்பானது” என்று கூறுகிறார் அவர்.

பிப்ரவரி 16-ம் தேதி விவசாயிகள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் இணைந்து ‘கிராமின் பாரத் பந்த்’ அழைப்பு விடுத்துள்ளன, இதில் பங்கேற்க உள்ளதாக அனைத்து விவசாய அமைப்புகளும் அறிவித்துள்ளன.

அதுதவிர, எதிர்கட்சிகளும் இந்த போராட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன.

முந்தைய விவசாய அமைப்புகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்கும் நிலையில், ராகேஷ் திகாயத் டெல்லிக்கு வந்த பிறகு அனைத்து அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ஹரியானாவில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்கள் வீசப்பட்டது, ஆணிகள் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து தற்போது அனைத்து அமைப்புகளும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

விவசாயிகள் போராட்டத்தின் தாக்கம்

வியாழக்கிழமையன்று, பிகேயு(உக்ரஹான்) நான்கு மணி நேரத்திற்கு தொடர் வண்டிமறியல் செய்ய உள்ளதாக அறிவித்தது.

அதே நேரத்தில் பேராசிரியர் தர்ஷன் பால் தலைமையிலான கிராந்திகாரி கிசான் யூனியனும், ஹரியானாவில் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குர்னாம் சிங் சதுனியின் அமைப்பு இந்த போராட்டத்தில் இதுவரை பங்கேற்கவில்லை. ஆனால் தற்போதைய நிலைமையை ஆராய்ந்து தனது அமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கையை தீர்மானிக்க ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் அவர்.

சண்டிகரைச் சேர்ந்த அரசியல் விமர்சகரான விபின் பப்பி, தற்போது நடந்து வரும் விவசாய அமைப்புகளின் போராட்டம் ஒரேயொரு தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.

அதாவது இந்த போராட்டத்தின் மூலம், தற்போது ஷிரோமணி அகாலி தளம் மற்றும் பாஜக கூட்டணிக்கான வாய்ப்பு மேகமூட்டம் போல் கலைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை நடந்த விவசாயிகள் போராட்டத்தில் , பஞ்சாபை சேர்ந்த விவசாயிகளிடமிருந்து அதிக எதிர்ப்பு எழுந்ததால், சிரோமணி அகாலிதளம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனாலும், பாஜகவிற்கு பஞ்சாபில் அதிக செல்வாக்கு இல்லை என்றும், தற்போது நடந்து வரும் விவசாயிகள் இயக்கத்திற்கு ஹரியானா அல்லது வேறு எந்த வடஇந்திய மாநிலங்களில் பெரியளவு செல்வாக்கு இல்லை எனவும் அவர் கூறுகிறார்.

மேலும் பேசிய விபின் பப்பி, தேர்தலுக்கு முன் மத்திய அரசு மற்றும் பாஜகவிற்கு அழுத்தம் தர விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர். ஆனால், அது பெரியளவில் பலனளிக்காது. காரணம் இந்த முறை பாஜக தன்னுடைய முழு பலம், மற்றும் நம்பிக்கையோடு களம் இறங்குகிறது என்று கூறியுள்ளார்.

ஆனால், இரண்டு வருடங்களுக்கு முன்பு டெல்லியின் எல்லைப்பகுதிகளில் விவசாயிகளின் வலுவான போராட்டம் நடைபெற்றது. அந்த சமயத்தில் உத்தரப்பிரதேசத்தின் தேர்தலும் நடக்க இருந்தது.

அந்த இயக்கத்தில் ராகேஷ் திகாயித்தின் பாரதிய கிசான் யூனியனும் முக்கிய பங்கு வகித்தது.

அந்த சமயத்தில் இந்த போராட்டத்தால், உத்தரபிரதேச தேர்தலில் பாஜக தோற்க நேரிடும் என்று கூட நிபுணர்களால் கூறப்பட்டது.

ஆனால், உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது தேர் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியிருந்த போதிலும் கூட, மேற்கு உத்தரபிரதேசம் மட்டுமல்லாது லக்கிம்பூர் கேரியிலும் பாஜக நல்ல வெற்றியை பெற்றதாக கூறுகிறார் அவர்.

இதற்காக உத்தரபிரதேச தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பாகவே மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டியிருந்தது.

முன்பு நடந்த போராட்டத்தில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதில் அரசிடம் சில குறைபாடுகள் இருந்தன. ஆனால், இந்த முறை மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா, வணிகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், மற்றும் உள்துறை இணையமைச்சர் நித்யானந் ராய் ஆகியோர் இரண்டு கட்டங்களாக விவசாய சங்க பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »