Press "Enter" to skip to content

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மூழ்கும் கப்பலின் கேப்டனா? – அரசியல் விமர்சகர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Selvaperunthagai K / X

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளைக் கடந்து தமிழ்நாடு காங்கிரஸ் குழுக்கு தலித் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையை தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவராக நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் பிப். 17 அன்று அறிவிப்பு வெளியிட்டார்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, உட்கட்சிப் பூசல், மற்ற தலைவர்களுக்குள் இணக்கமின்மை உள்ளிட்ட பல சவால்கள் செல்வப்பெருந்தகைக்கு முன்னே உள்ள நிலையில், அழுத்தங்களை எப்படி அவர் எதிர்கொள்ளப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, மூழ்கும் கப்பலுக்குக் ‘கேப்டனை’ மாற்றி என்ன பயன் என்றும் அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மைய கட்டுப்பாட்டு வங்கி பணியாளராக இருந்த செல்வப்பெருந்தகை, சுமார் 25 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர். 2000-களின் ஆரம்பத்தில் புதிய பாரதம் கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், அதன்பின் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்தில் இணைந்தார். பின்னர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து, 2006 சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டத்தின் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

அதன்பின், விசிகவிலிருந்தும் விலகி 2008-ல் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து அக்கட்சியின் மாநில தலைவரானார். பின்னர், 2010-ல் தான் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2011, 2016 தேர்தல்களில் முறையே செங்கம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய செல்வப்பெருந்தகை, 2021 தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

செல்வப்பெருந்தகை

பட மூலாதாரம், Selvaperunthagai K / X

“கட்சியை பலப்படுத்துவேன்”

தமிழ்நாடு காங்கிரஸ் குழுக்கு தலித் சமூகத்திலிருந்து முதன்முதலாக தலைவராக நியமிக்கப்பட்டவர் கக்கன். பின்னர், அச்சமூகத்தைச் சேர்ந்த மரகதம் சந்திரசேகர், இளையபெருமாள் உள்ளிட்டோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். 1979-ம் ஆண்டில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளையபெருமாள் தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவராக இருந்த நிலையில், அதன்பின் 40 ஆண்டுகளை கடந்து தற்போது தலித் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டிருக்கிறார்.

2010-ல் காங்கிரஸில் செல்வப்பெருந்தகை இணையும் நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம், “செல்வப்பெருந்தகை தலைமையில் ஏராளமான தலித் தலைவர்கள் கட்சியில் இணைந்துள்ளனர். இதனால், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு தலித் தலைமை கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது” என்று பேசினார். 14 ஆண்டுகள் கழித்து ப.சிதம்பரம் பேசியது நடந்திருக்கிறது.

தலைவராக தன்னை நியமித்திருப்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “என் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பு கொடுத்திருக்கின்றனர். அதனை காப்பாற்றுவேன். கட்சியை பலப்படுத்துவேன். காங்கிரஸ் கட்சிக்கு எந்த சவாலும் இல்லை. கட்சியில் அனுபவம்மிக்க தலைவர்கள் இருக்கின்றனர். அவர்களை ஒருங்கிணைத்தாலே காங்கிரஸ் மிகப்பெரும் கட்சியாக எழுச்சி பெறும். தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது” என்றார்.

மல்லிகார்ஜுன கார்கே

பட மூலாதாரம், Getty Images

“அடிமட்ட கட்டுமானமே இல்லை”

ஆனால், அவருக்கு பல சவால்கள் இருப்பதாகவே கருதுகின்றனர் தமிழக அரசியலை உற்றுநோக்குபவர்கள்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவராக உள்ள நிலையில் தமிழ்நாட்டு தலைவராகவும் தலித் தலைவர் நியமிக்கப்பட்டிருப்பது கட்சிக்குள் நிகழும் குறிப்பிடத்தகுந்த மாற்றம் தான் என்றாலும், இதனை அடையாள அரசியலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

“அடையாள அரசியலாகத்தான் இதனை பார்க்க வேண்டியிருக்கிறது. சமூக நீதி சார்ந்த முடிவாக இது இருக்குமா என்று சொல்ல முடியாது. மல்லிகார்ஜுன கார்கே முற்போக்கானவர் தான். ஆனால், அதனால் எழுந்த முடிவாக இதனை கருத முடியாது. பொருளாதார ரீதியில் பின் தங்கிய முன்னேறிய சமூகத்தினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் காங்கிரஸ் சமூக நீதி சார்ந்து முடிவெடுக்கவில்லை. அதில், தெளிவு இருந்திருக்க வேண்டும்” என்றார்.

அதுமட்டுமல்லாமல், மிக இக்கட்டான சூழலில் காங்கிரஸ் இந்த நியமனத்தை செய்திருப்பதாக கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

“தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு அடிமட்ட கட்டுமானமே இல்லை. திமுக தோளில் சவாரி செய்துகொண்டே வெற்றி பெறலாம் என காங்கிரஸ் நம்புகிறது. கூட்டணி கட்சியாக இருப்பதாலேயே அரசுக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது, போராட்டம் நடத்துக் கூடாது என்பதல்ல. ஆனால், காங்கிரஸ் ஆளும்கட்சி குறித்து பேசுவதே இல்லை. இப்போது நியமிக்கப்பட்ட தலைவருக்கு மற்ற தலைவர்கள் பலரும் ஒத்துழைப்பு தர மாட்டார்கள். தலைமையை மாற்றுவதாலேயே எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைக்காது. கப்பல் மூழ்கும் போது கேப்டனை மாற்றி என்ன பயன்?” என்றார் ப்ரியன்.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் அக்கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் வாக்கு வங்கி 4.27%.

தற்போதும் 5 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியுடன் தான் காங்கிரஸ் இருப்பதாக கூறும் ப்ரியன், அதுவும் திமுகவினுடையது தான் என்றார்.

கே.எஸ். அழகிரி

பட மூலாதாரம், K.S. Alagiri/Facebook

காங்கிரஸ் மீதான விமர்சனங்கள்

மற்ற தலைவர்களுடன் இணக்கத்தை ஏற்படுவது செல்வப்பெருந்தகைக்கு சவாலாக இருக்கும் என்கிறார் ப்ரியன்.

“காங்கிரஸில் கோஷ்டிப்பூசல் நகமும் சதையுமாக இருக்கிறது. செல்வப்பெருந்தகையை நியமித்ததற்காகவே நான்கு பேர் வெளியே செல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

உட்கட்சித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்தால் மற்ற தலைவர்களும் தொண்டர்களும் மதிப்பார்கள். ஆனால், நியமனம் செய்திருப்பதால், எவ்வளவு பேர் அவரை ஏற்றுக்கொள்வார்கள் என தெரியாது” என்றார்.

உட்கட்சிப் பூசல் குறித்த கேள்விக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, “மூத்தத் தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். எல்லோரையும் அரவணைத்தாலே பிரச்னைகள் சரியாகிவிடும். நான் அவர்களை இணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும்” என்றார்.

சுமார் 5 ஆண்டுகளாக தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவராக இருந்த கே.எஸ். அழகிரியை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் கட்சிக்குள்ளேயே கடந்த 2 ஆண்டுகளாக எழுந்து வந்தன.

“கட்சியை வளர்ப்பதற்கான வேலைகளை காங்கிரஸ் தலைவர்கள் செய்வதில்லை. இதற்கு முன்பு இருந்த கே.எஸ். அழகிரி எத்தனை ஊர்களில் காங்கிரஸ் கொடியேற்றி வைத்தார், பூத் குழு அமைத்தார்?

1967-க்குப் பிறகு இன்னும் காங்கிரஸ் தமிழகத்தில் எழுந்திருக்க முடியாத நிலையில் தான் இருக்கிறது. திமுக கூட்டணியில் மக்களவை தேர்தலில் 10 சீட்டுகள், சட்டமன்ற தேர்தலில் 25 சீட்டுகள் என்ற நிலையிலேயே உள்ளது. அதுவும் குறிப்பிட்ட நபர்களுக்காக, வாரிசுகளுக்காகவே சீட் கேட்கிறது. இப்படியிருந்தால் கட்சி எப்படி வளரும்?” என கேட்கிறார் ப்ரியன்.

“சீட்டுகளுக்காக மட்டுமே தேர்தல் நேரத்தில் திமுகவுடன் காங்கிரஸ் வருகிறது, தேர்தல் வேலை செய்வதில்லை” என்பது போன்ற விமர்சனங்களை திமுகவினரே வெளிப்படையாக வைக்கும் நிலையில் அதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, “எல்லோருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். ஆனால், திமுக தலைமை காங்கிரஸுடன் இணக்கமாக இருக்கிறது. ஓரிரு நபர்கள் இப்படி பேசுவதை கட்டுப்படுத்த முடியாது. எல்லோருக்கும் பேச்சுரிமை இருக்கிறது” என்றார்.

அதிகாரம் இருக்குமா?

அண்ணாமலை

பட மூலாதாரம், K. Annamalai/X

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களாக மாநிலம் முழுவதும் `என் மண், என் மக்கள்` என்ற பெயரில் பாத யாத்திரை சென்று வருகிறார். ஆனால், காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் அமைதியாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கின்றனர்.

“அண்ணாமலை பாத யாத்திரை செல்கிறார். இதனால், பாஜக வளர்ந்திருக்கிறதா என தெரியவில்லை. ஆனால் முயற்சி எடுக்கிறார். ஆனால், காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லை” என்கிறார், ப்ரியன்.

காங்கிரஸ் ஒன்றிய, நகர அளவில் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் பொதுக்கூட்டம், மாநாடு நடத்த வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

செல்வப்பெருந்தகை நன்றாக உழைக்கக்கூடியவர் தான் என்றாலும், அடிமட்ட அளவில் காங்கிரஸை வளர்க்க அவர் பணியாற்ற வேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

மத்திய பிரதேசத்தில் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு செல்லலாம் என தகவல்கள் வருகின்றன. அதேபோன்று மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் அசோக் சவானும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இப்படி முன்னாள் முதலமைச்சர்களை தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் கட்சி மாறுவது தமிழ்நாட்டில் திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

“நேரடியாக இதுகுறித்து தொகுதிப் பங்கீட்டில் பேசாவிட்டாலும் மறைமுக தாக்கம் இருக்கும். இதை செல்வப்பெருந்தகை எப்படி சமாளிப்பார்? தேசியளவில் காங்கிரஸ் சந்தித்திருக்கும் பின்னடைவு இங்கும் தொகுதிப் பங்கீட்டில் எதிரொலிக்கும்” என்றார்.

தேசிய கட்சிகளில் மாநில தலைமைகளுக்கு அதிகாரங்கள் மிகக்குறைவு என்பதால், பல முடிவுகளை செல்வப்பெருந்தகை மட்டுமே எடுக்க முடியாது என்கிறார் அவர்.

குறிப்பாக, முன்னாள் தலைவர்களான திருநாவுக்கரசர், கே.வி. தங்கபாலு,தேசிய அளவில் காங்கிரசின் முகமான ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்களை மீறி அவர் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பது சிரமம் தான் என்பது ஏ.எஸ். பன்னீர்செல்வத்தின் கருத்தாக உள்ளது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »