Press "Enter" to skip to content

கேரளாவைப் போல காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல தமிழ்நாடு அரசு திட்டமிடுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ச.பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

கேரளாவில் பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை அம்மாநில அரசு சுட்டுக் கொன்று வருகிறது. இதைப் பின்பற்ற தமிழக அரசும் திட்டமிட்டுள்ளது.

இந்தியா முழுவதிலும் வனத்தை ஒட்டிய விளைநிலங்களில், காட்டுப்பன்றிகள் சிறு அல்லது பெருங்கூட்டமாக புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

காட்டுப்பன்றிகளின் அதீத அளவில் இனப்பெருக்கம் செய்து, அதனால் மனித – வனவிலங்கு மோதல் அதிகரித்துள்ளதுடன், அதிகப்படியான விளைநிலங்களின் பயிர்கள் சேதமடையும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

தேசிய அளவில் இப்பிரச்னை இருந்தும், முதலாவதாக உத்தராகண்ட் மாநிலம் தான் காட்டுப்பன்றிகளை பயிர்களுக்கு அச்சுறுத்தலான விலங்கு (vermin) என்ற பட்டியலில் சேர்த்து மூன்று ஆண்டுகளாக அவற்றைச் சுட்டு அழித்தன.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கேரளாவில் தான் முதலில் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவைப் போல் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல திட்டமிடும் தமிழக அரசு

பட மூலாதாரம், Getty Images

கேரளாவில் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி

கேரள மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பான 38,852 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், 52.30% வனப்பகுதிகளான உள்ளன. காட்டுப்பன்றிகளால் கேரளாவில் தொடர்ந்து பல ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்ததால், அம்மாநில விவசாயிகள் காட்டுப்பன்றி பிரச்னைக்கு நிரந்தர தீர்வை கேட்டு கோரிக்கை விடுத்தனர்.

அதனடிப்படையில் கடந்த ஆண்டு ஆளும் கம்யூனிஸ்ட் அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, வன எல்லையில் பயிர்கள் சேதமடையும் விளைநிலங்கள் அருகே, காட்டுப்பன்றிகளை துப்பாக்கியால் சுட்டு அழிக்க அனுமதியளித்துள்ளது. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மேற்பார்வையில், பயிற்சி பெற்ற துப்பாக்கி சுடும் நபர்களை வைத்து வனத்துறையினர் மூலம் காட்டுப்பன்றிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

இரு நாட்களுக்கு முன்பு கூட கேரள பாலக்காடு மாவட்டத்தில், 34 காட்டுப்பன்றிகள் சுட்டு அழிக்கப்பட்டன. இப்படியான நிலையில், தமிழ்நாடு வனத்துறையும் காட்டுப்பன்றிகளை சுட்டு அழிப்பதற்கான திட்டத்தை வகுத்து வருகிறது.

காட்டுப் பன்றி

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் பாதிப்பு என்ன?

தமிழகத்தை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 1.3 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், 20.21% (20,281 சதுர கி.மீட்டர்கள்) வனப்பகுதிகள் தான்.

இதில், குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள், கர்நாடகா காவிரி காப்புக்காட்டை ஒட்டிய தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் தென்காசி, தஞ்சை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில், காட்டுப்பன்றிகளால் அதீத பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தமிழ்நாடு வனத்துறை சோதனை முயற்சியாக, 2018-இல் நீலகிரியில் குறுகிய நிலப்பரப்பில் ஆய்வு செய்து அங்குள்ள, 128 விவசாயிகளிடம் பயிர்களின் பாதிப்பை கணக்கிட்டனர். இதில், ஒரு மாத இடைவெளியில், 20-30 முறை காட்டுப்பன்றிகள் கூட்டாக தாக்குவதை கண்டறிந்தனர்.

கேரளாவைப் போல் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல திட்டமிடும் தமிழக அரசு

பட மூலாதாரம், Getty Images

காட்டுப்பன்றிக்கான வேலிகளில் சிக்கிப் பலியாகும் யானைகள்

தமிழ்நாடு விவசாயிகளின் தீவிர பிரச்னையாக காட்டுப்பன்றிகள் உள்ளதால், விவசாயிகள் பலரும் பயிர்களை காக்கும் நோக்கத்தில் சில சட்ட விரோத செயல்களைச் செய்வதால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு யானைகள் மரணிப்பது அதிகரித்துள்ளது.

பல இடங்களில் விவசாயிகள் தாங்களே சட்ட விரோதமாக மின் வேலிகள் அமைப்பது, கம்பித்தடுப்புகள் அமைத்து அதில் அவுட்டுக்காய் (நாட்டு வெடி குண்டு) வைக்கின்றனர். இந்த வேலி மற்றும் அவுட்டுக்காய் பாதிப்பால் யானைகள் தான் அதிகம் மரணித்து வருகின்றன.

2023 தருமபுரி மாரண்டஹள்ளியில், காட்டுப்பன்றிக்காக விவசாயி அமைத்திருந்த சட்ட விரோத மின்வேலியில் சிக்கி, ஒரே கூட்டத்தைச் சேர்ந்த மூன்று யானைகள் பலியாகின. கோவை மாவட்டத்தில் இரண்டு ஆண்டில் மட்டுமே அவுட்டுக்காய் வெடியில் சிக்கி 6 யானைகள் மரணித்துள்ளன. வனத்துறையின் அதிகாரப்பூர்வ தகவலின் படி, மின்வேலி மற்றும் அவுட்டுக்காய் வெடியால் மட்டுமே தமிழகத்தில், 2003-2023 வரையிலான 20 ஆண்டுகளில், 68 யானைகள் மரணித்துள்ளன.

காட்டுப்பன்றிகளால் இப்படி பலவித பிரச்னைகள் நிலவும் நிலையில் தான், கேரளாவை பின்பற்ற தமிழ்நாடு அரசு திட்டமிட்டு, வனத்துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள், வல்லுநர்கள் என 19 பேர் கொண்ட குழுவை அமைத்து அவர்களை கேரளாவிற்கு பயிற்சிக்காக அனுப்பியுள்ளது.

ஓசை காளிதாசன்

பட மூலாதாரம், Osai Kalidasan/Facebook

சூழலியலில் காட்டுப்பன்றிகளின் முக்கியத்துவம் என்ன?

இந்திய வன பாதுகாப்புச்சட்டம் 1972-இன் படி பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் காட்டுப்பன்றி உள்ளது.

காட்டுயிர்ச்சூழலில் காட்டுப்பன்றியின் முக்கியத்துவம் என்ன என்பதை பிபிசி தமிழிடம் விளக்கினார், கோவை ’ஓசை’ சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன்.

நம்மிடம் பேசிய காளிதாசன், ‘‘காட்டுப்பன்றிகள் சூழலியலில் முக்கிய பங்கு வகிக்கிறது. காட்டினுள் இறந்து அழுகிக்கிடக்கும் யானை, மான் உள்பட மற்ற காட்டுயிர்களை உட்கொண்டும், கிழங்கு மற்றும் தாவரங்களை உட்கொண்டும் காட்டின் தூய்மையாளர்களாக விளங்குகின்றன.

அதற்காக நகரத்தினுள் அமர்ந்து கொண்டு, நாம் காட்டுப்பன்றிகளை காக்க வேண்டும் என்ற கருத்தை மட்டுமே முன்வைத்து, விவசாயிகளை கைவிடக்கூடாது. இங்கு விவசாயிகளும் பயிர் சாகுபடியும் முக்கியம் அதேபோன்று, உயிர்ச்சூழலியல் ரீதியில் காட்டுப்பன்றிகளும் முக்கியம்,’’ என்கிறார் அவர்.

மேலும் காட்டுப்பன்றிகளின் வகைகளை விளக்குகிறார் காளிதாசன்.

‘‘காட்டுப்பன்றிகள் மூன்று வகைகளாக உள்ளன. முதலாவது காட்டுக்குள் மட்டுமே வசிப்பவை. இரண்டாவது காட்டுக்குள் வசித்துக்கொண்டு விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சாப்பிட்டுவிட்டு மீண்டும் வனத்தினுள் செல்பவை.

மூன்றாவது வகை வனத்தை விட்டு வெளியேறி வன எல்லையில் பயிர்களை சாப்பிட்டு, அந்த விளைநிலங்கள் அருகிலேயே நிரந்தரமாக தங்கியிருப்பவை. இந்த 2 மற்றும் 3-வது வகைகளைத்தான் நாம் கட்டுப்படுத்த அல்லது அழிக்க வேண்டும்,’’ என விளக்கினார்.

காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்வது நல்ல முடிவா?

காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்வது நல்ல முடிவா? என்ற கேள்வியை நாம் ‘ஓசை’ காளிதாசனிடம் முன்வைத்தோம்.

அதற்கு விளக்கமளித்த அவர், ‘‘காட்டுப்பன்றிகளின் இனப்பெருக்கம், நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது காலத்தின் கட்டாயம். அவற்றை சுட்டுக்கொல்வதற்கு முன்பு அரசு கட்டாயம் சிலவற்றை செய்ய வேண்டும். முதன்மையாக எங்கெல்லாம் பாதிப்புகள் இருக்கிறது என தரவுகள் சேகரிக்க வேண்டும், அந்த இடங்களுக்கு அருகே காட்டுப்பன்றிகள் தங்கும் நீர்நிலைகளை தூர்வாரி, புதர்களை அகற்ற வேண்டும்.

அப்போது அவற்றின் வாழ்விடம் கேள்விக்குறியாகும், மீண்டும் அவை வனத்திற்கே திரும்பும். மீண்டும் அவை வெளிவரும் பகுதிகளில் மட்டும் விரட்டினால் போதும். இவற்றை கடந்து தான் இறுதியாக குறிப்பிட்ட கால இடைவெளிக்கு மட்டுமே அவற்றை சுட்டுக்கொல்ல அனுமதியளிக்க வேண்டும். காட்டுப்பன்றிகளை தமிழக அரசு கட்டுப்படுத்தினால் சட்ட விரோத மின் வேலி, நாட்டு வெடி வைப்பதும், யானைகள் மரணிப்பது எல்லாம் நிச்சயமாக குறையும்,’’ என்கிறார் அவர்.

சுப்ரியா சாஹூ

பட மூலாதாரம், Supriya Sahu/X

வனத்துறை செயலாளர் சொல்வது என்ன?

காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல திட்டமிட்டுள்ளது குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, ‘‘காட்டுப்பன்றி பாதுகாக்கப்பட்ட காட்டுயிர் பட்டியலில் இருப்பதால், அவற்றை சுட்டு அழிப்பது போன்ற நடவடிக்கையை மிகவும் கவனமாக கையாள வேண்டியுள்ளது. எங்கள் குழு கேரளாவில் எப்படி காட்டுப்பன்றியை அழிக்கிறார்கள் என ஆராய்ந்து, பயிற்சி பெற்று வருகிறார்கள்; மற்ற மாநிலங்களையும் ஒப்பிட்டு வருகிறார்கள். அவர்கள் அறிக்கை கொடுத்ததும் அரசிடம் சமர்பிக்கப்பட்டு, காட்டுப்பன்றிகள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்,’’ என்றார் சுருக்கமாக.

பி.ஆர். பாண்டியன்

‘தமிழக அரசு காலம் தாழ்த்துகிறது’

காட்டுப்பன்றிகள் விவசாயிகளுக்கு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது என்கிறார், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

பிபிசி தமிழிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், ‘‘இந்தியாவில் கேரளா மட்டுமின்றி பல மாநிலங்களில் காட்டுப்பன்றிகளை சுட்டு அழிக்கும் உத்தரவு அமலில் உள்ளது. அதைச்செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஏன் தாமதிக்க வேண்டும்? தற்போது கேரளா சென்று ஆய்வு செய்வது என்பதே மிகத்தாமதமான செயல்தான்.

தமிழகத்தில் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. ஆனால், ஆளும் திமுக அரசோ பல மாவட்டங்களில் அதற்கு உரிய இழப்பீட்டையும் வழங்குவதில்லை, அனைத்திலும் காலம் தாழ்த்தி விவசாயிகளை வஞ்சிக்கிறது. காட்டுப்பன்றி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு இதுவரை இல்லை; உடனடியாக காட்டுப்பன்றிகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என, தமிழ்நாடு அரசின் மீது குற்றசாட்டுக்களை முன்வைக்கிறார் அவர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »