Press "Enter" to skip to content

தமிழ்நாடு வரவு செலவுத் திட்டம்: கோவை, மதுரையில் பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) உள்பட 10 முக்கிய அம்சங்கள்

பட மூலாதாரம், TN GOVT

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவால் தாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. அரசின் இதற்கு முந்தைய 3 நிதி நிலை அறிக்கைகளை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த நிதிநிலை அறிக்கையை தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த முதல் நிதி நிலை அறிக்கை இது.

இந்த நிதிநிலை அறிக்கையை காலை பத்து மணியளவில் தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு. அறிக்கையின் துவக்கப் பகுதியில், இதற்கு முன்பாக இருந்த அரசுகள் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களை நிதியமைச்சர் பட்டியலிட்டார்.

நிதி நெருக்கடி, இயற்கைப் பேரிடர், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய அரசு ஆகியவற்றுக்கு நடுவில் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சமூக நீதி, கடைக்கோடி தமிழர் நலன், உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், மகளிர் நலன்காக்கும் சமத்துவப் பாதை, பசுமை வழிப் பயணம், தாய்த்தமிழும் பண்பாடும் ஆகிய ஏழு அம்சங்களை மனதில் வைத்து இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய 10 அம்சங்கள்

  • உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் இத்திட்டத்தை விரிவுப்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திட , தமிழ் புதல்வன் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். ஆறு முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும். இதில் 3,00,000 மாணவர்கள் பயனடையாவர்கள். இதற்கு ரூ. 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழே வசிப்பவர்களின் விகிதம் 2.2 சதவீதமாக உள்ளது. மிகவும் வறிய நிலையில் உள்ள ஐந்து லட்சம் குடும்பங்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை ஒருங்கிணைந்து வழங்கி, அவர்கள் வறுமையிலிருந்து மீட்டெடுக்கப்படுவார்கள். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என இது அழைக்கப்படும்.
  • காலை உணவுத் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-5ஆம் வகுப்புவரை விரிவுபடுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக இந்த ஆண்டு 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்காக இந்த ஆண்டு 13,720 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். பெண்களின் இலவசப் பயணத் திட்டத்திற்காக இந்த ஆண்டு ரூ. 3,050 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மகளிர் இலவச பேருந்து திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
  • இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் 25 இந்திய, உலக மொழிகளில் மொழிபெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு. உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்நூல்களை உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இடம்பெறச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
தமிழ்நாடு வரவு செலவுத் திட்டம்

பட மூலாதாரம், TN GOVT

6. 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும். 24-25 ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். சொந்த மனைகள் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்படும். கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

7. உயர்கல்வியை தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்விக்கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும். வரும் நிதியாண்டில் இந்த திட்டத்துக்கு 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8. மதுரையில் 26,500 சதுர அடி பரப்பளவில் தொழில் புத்தாக்க மையம் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். மதுரை, திருச்சியில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர், சேலம், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோவை விளாங்குறிச்சியில் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20,00,000 சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (ஐ.டி. பார்க்) அமைக்கப்படும்.

9. 2024-25ல் கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை, திருமலாபுரம், சென்னானூர் உள்ளிடட் எட்டு இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். மஸ்தி, பாலூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளிலும் அகழாய்வு மேற்கொள்ளப்படும். இந்த அகழாய்வுப் பணிகளுக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கீழடி அகழாய்வு பணிகளில் வெளிவந்த செங்கல்கட்டுமானம், கிணறு, பிற கட்டுமானங்களை அனைவரும் பார்க்கும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும். இதற்காக 17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

10. கோவை, மதுரையில் பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) திட்டங்களைத் தொடங்குவதற்கான விரிவான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்படும். சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயிலை நீடிக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும். சென்னை பூந்தமல்லி முதல் கோடம்பாக்கம் வரையிலான பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) வழித்தடம் அடுத்த ஆண்டு டிசம்பரில் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

தமிழ்நாடு வரவு செலவுத் திட்டம்

பட மூலாதாரம், TN GOVT

இவை தவிர இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் தமிழ் மொழி மற்றும் தமிழர் மரபு சார்ந்த முக்கிய அம்சங்கள் :

தமிழின் அரிய நூல்களை மின்நூலாக மாற்றும் பணிக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழர்களின் மரபணுத் தொன்மை, வேளாண்மை, இடப்பெயர்வு ஆகியவற்றை ஆய்ந்தறிய காமராசர் பல்கலைக்கழகத்தில் செயல்படும் மரபியல் துறையில் தொல்மரபணுவியல் ஆய்வகத்திற்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். சிந்துவெளி நூற்றாண்டு பன்னாட்டு கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்படும்.

சென்னை நகருக்கான சில புதிய கட்டமைப்பு திட்டங்களும் இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை தீவுத்திடலில் நகர்ப்புற பொதுச் சதுக்கம் உருவாக்கப்படும். இங்கே திறந்தவெளி அரங்குகள், கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படும். கடற்கரையோரப் பகுதிகளை ஒட்டிய சாலைகள் மேம்படுத்தப்படும். சென்னை பூந்தமல்லிக்கு அருகில் அதிநவீன திரைப்பட நகரம் 150 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும். 500 கோடி ரூபாய் செலவில் இந்த நகரம் உருவாக்கப்படும். சென்னை சென்ட்ரல் தொடர் வண்டிநிலையத்திற்கு எதிரில் மரபுசார் வடிவமைப்புடன் பத்து லட்சம் சதுர அடி பரப்பில் புதிய கட்டடம் கட்டப்படும். பிராட்வே பேருந்து நிலையத்தில் பன்முக வசதிகள் கொண்ட புதிய பேருந்து நிலையமும் அலுவலக வளாகமும் உருவாக்கப்படும்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 20,198 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். புதிய புற்றுநோய் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை உயர்நிலை புற்றுநோய் கருவிகள் வழங்கப்பட்டு உயர்திறன் மையமாக தரம் உயர்த்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், காவிரி, வைகை, தாமிரபரணி, நொய்யல் ஆகிய நதிகளை ஒட்டிய பகுதிகளைச் சீரமைக்கவும் பூங்காக்கள் அமைக்கவும் நதிகள் சீரமைப்புக்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஐந்து கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கல்வியில் தமிழ் புதல்வன் திட்டம் மட்டுமல்லாமல் வேறு சில அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வி சேரும் மாணவிகள் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தத் திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் தமிழ்வழியில் படிக்கும் மாணவிகளுக்கும் வழங்கப்படும். 370 கோடி ரூபாய் இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி பெயரில் மிகப் பெரிய நூலகம் அமைக்கப்படும்.

தமிழ்நாடு வரவு செலவுத் திட்டம்

பட மூலாதாரம், TN GOVT

மேலும் தொழில்துறை சார்ந்து இந்த நிதிநிலை அறிக்கையில் வெளிவந்துள்ள அறிவிப்புகள்:

தஞ்சை மண்டலத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க ரூ. 120 கோடி செலவில் 300 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு 500 பேருக்கு மேல் நேரடி வேலை வாய்ப்பு வழங்கும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அரசு வழங்கும்.

தமிழ்நாட்டில் அமையும் புதிய உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்களில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட மாத ஊதியத்துடன் உருவாக்கப்படும் உயர்திறன் மிக்க வேலைகளுக்கு முதலாம் ஆண்டு 30 சதவீதமும் இரண்டாம் ஆண்டு 20 சதவீதமும் மூன்றாம் ஆண்டு 10 சதவீதமும் மானியமாக வழங்கப்படும்.

உலகின் முன்னணி புத்தொழில் நிறுவனங்களும் இளம் தொழில் முனைவோரும் கலந்துகொள்ளும் வகையில் Global Startup Summit 2025 ஜனவரியில் சென்னையில் நடத்தப்படும். பெரியார் சமூக நீதி புத்தொழில் மையம் – Periyar Social Justice Venture Lab – உருவாக்கப்படும். விளிம்புநிலையில் வாழும் மக்கள், பட்டியலின, பழங்குடியினரால் தொடங்கி நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இந்த மையம் முன்னுரிமை அளிக்கும்.

விண்வெளி சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் விதமாக 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்காவை டிட்கோ அமைக்கும். தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு குறித்த கொள்கையை வகுக்க தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் ஏற்படுத்தப்படும்.

இவை மட்டுமல்லாமல், இந்த நிதிநிலை அறிக்கையின் வேறு சில முக்கிய அம்சங்களும் உள்ளன.

2030ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் யூனிட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்க திட்டம் வகுக்கப்படும்.

லண்டன் க்யூ கார்டன் நிறுவனத்தின் உதவியோடு 345 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் மாபெரும் பல்லுயிர் பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இந்த நிதியாண்டில் புதிதாக 3,000 பேருந்துகள் வாங்கப்படும். சிற்றுந்துத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

தொல்குடி என்ற புதிய திட்டத்தின் கீழ் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். பழங்குடியின இளைஞர்களுக்கு தொழில்பயிற்சிகள் அளிக்கப்படும்.

பள்ளிவாசல், தர்காக்களை சீரமைக்க, பழுதுபார்க்க பத்து கோடி ரூபாய் நிதியுதவி செய்யப்படும். பழமையான தேவாலயங்கள் புதுப்பிக்கப்படும்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோவில்களில் திருப்பணிகள் செய்திட இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தெரு நாய்கள் பெருகியிருப்பதால், அவற்றின் இனப்பெருக்கத்தைத் தடைசெய்யும் மையங்களை உருவாக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சர்வதேச கண்காட்சிகள், மாநாட்டுக் கூட்டங்கள் நடத்திடும் வகையில், கலைஞர் மாநாட்டு அரங்கம் (Kalaignar Convention Centre) கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் மூன்று லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும்.

இலங்கைத் தமிழர்களுக்கு என அறிவிக்கப்பட்ட 3,510 வீடுகளில் 1,591 வீடுகளுக்கான பணிகள் முடிவடைந்துள்ளன.

இந்த அறிவிப்புகள் தவிர, மாநில நிதிநிலை குறித்த சில தகவல்களையும் நிதியமைச்சர் வெளியிட்டார்.

பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் இருப்பதால் முழுச் செலவையும் மாநில அரசே செய்கிறது. இதனால், 9,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவு ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டுள்ளதால், 20,000 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு இரண்டு மிகப் பெரிய இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்தபோதும் மத்திய அரசு எவ்வித நிவாரண நிதியையும் தரவில்லை.

2023-24ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பீடு 3,08,056 கோடி ரூபாயாக இருந்தது. திருத்த மதிப்பீட்டில் 3,37,484 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 1,81,182 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் வரி வருவாய் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 1,70,147 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

2023-24 ஆம் ஆண்டிற்காண வரவு செலவுத் திட்டத்தில் 37,540 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறை திருத்த மதிப்பீடுகளில் 44,907 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிதி பற்றாக்குறையைப் பொறுத்தவரை 92,075 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் நிதிப் பற்றாக்குறை 94,060 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தின் வருவாய் பற்றாக்குறை 36,017 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் அது 27,790 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 1,08,690 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.44 சதவீதமாக இருக்கும்.

தமிழ்நாட்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை பிப்ரவரி 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »