Press "Enter" to skip to content

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு – மனைவிக்காக உதவி செய்த காவலர் கைது

குரூப் 2 ஏ தேர்வு முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட காவலர் முத்துக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குரூப் 2 ஏ தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து 42 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த 8 பேருமே அரசு ஊழியர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தால் குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி என்பது குறித்து தெரியவந்தது. அதாவது, குரூப் 4 தேர்வில் எளிதில் அழியக்கூடிய பேனாவை வைத்து மோசடியில் ஈடுபட்டது போல், குரூப் 2 ஏ தேர்வில் விடைத்தாளை மாற்றி இணைத்து மோசடி நடைபெற்றுள்ளது.

ராமேஸ்வரத்தில் தேர்வு எழுதியவர்கள் மீது தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்டவர்கள் முதல் 20 கேள்விகளுக்கு மட்டுமே பதில் எழுதியுள்ளனர். மற்ற கேள்விகளுக்கு விடையளிக்கவில்லை. இதை குறியீடாக வைத்து, ஜெயக்குமார் என்பவரின் தலைமையில் இருக்கக்கூடிய மோசடி கும்பல், மீதமுள்ள விடையை நிரப்பியுள்ளது. இதனால் 42 பேரும் தேர்ச்சி பெற்று வேலை வாங்கியுள்ளனர்.
இந்நிலையில், குரூப் 2 ஏ தேர்வு முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட காவலர் முத்துக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். முத்துக்குமாரின் மனைவி குரூப் 2 ஏ தேர்வில் 24 வது இடத்தில் தேர்ச்சி பெற்று எழிலகத்தில் உதவியாளராக உள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »