Press "Enter" to skip to content

வரவு எட்டணா செலவு பத்தணா.. என்ன செய்யப் போகிறது மத்திய அரசு..!

மத்திய அரசுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வரி வருவாய் வசூலும் பெரிய அளவுக்கு இல்லை. பல மாதங்களில், எதிர்பார்த்த அளவு கூட வரி வசூலாக வில்லை என செய்திகள் வெளியாயின. ஜிஎஸ்டி போல, நேரடி வரி வசூல் கூட டவுன் தான். இது போக, 1.4 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி குறைத்தும், இது வரை பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை. மத்திய அரசின் நேரடி வரி வருவாய் அடி வாங்கியது தான் மிச்சம். ஆக வருவாய் இழப்பைச் சரி கட்ட மத்திய அரசு ஆர்பிஐயில் கை வைத்தது.

1.76 லட்சம் கோடி

இந்த 2019-ம் ஆண்டில் தான் மத்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயை வாங்கிக் கொண்டது மத்திய அரசு. இருப்பினும் இந்தியப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர முடியவில்லை. ஆர் பி ஐயிடம் இருந்து, ஏற்கனவே வாங்கிய தொகை பத்தாமல், மீண்டும் இடைக்கால ஈவுத் தொகையாக, 35,000 – 45,000 கோடி ரூபாய் கூடுதலாகக் கேட்க இருப்பதாகச் செய்திகள் வெளியாயின.

காசு கொடு

அது போக, மத்திய அரசின் மிகப் பெரிய நிறுவனங்களான இந்தியன் ஆயில், கெயில், பாரத் பெட்ரோலியம், ஆயில் இந்தியா, ஓ என் ஜி சி, இன்ஜினியர்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்களிடம், மத்திய அரசு, கூடுதலாக ஈவுத்தொகைகளைக் கேட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால் அந்த நிறுவனங்களுக்கே இந்த 2019 – 20 நிதி ஆண்டில் முதல் அரையாண்டில் போதுமான வருமானம் வரவில்லையாம். கீழே அட்டவணையில் பார்க்கவும்.

மத்திய அரசு நிறுவனங்களின் லாபம் சரிவு விவரங்கள்

நிறுவனங்களின் பெயர் 2019 – 20 (ஏப் – செப். கோடி, ரூ) 2018 – 19 (ஏப் – செப். கோடி, ரூ) சரிவு (%)

இந்தியன் ஆயில் 4,159 10,078 -59

கெயில் 2,352 3,222 -27

பாரத் பெட்ரோலியம் 2,783 3,511 -21

ஆயில் இந்தியா 1,252 1,565 -20

ஓ என் ஜி சி 12,167 14,408 -16

இன்ஜினியர்ஸ் இந்தியா 192 184 4

பொதுத் துறை நிறுவனங்கள்

எப்படியாவது வருவாயை அதிகரிக்க, அரசு நிறுவனங்களை விற்று பணத்தைத் திரட்டக் கூட முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இதுவரை பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா மாதிரியான நிறுவனங்களை விற்க முடியவில்லை. ஆக பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்றும் பணத்தைத் திரட்ட முடியாத சூழலில் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆக என்ன செய்தும், மத்திய அரசால் தன் வருவாயை எதிர்பார்த்த அளவுக்கு அதிகரித்துக் கொள்ள முடியவில்லை. இருக்கவே இருக்கே கடன், வெகத்தை விட்டு கையை நீட்டி கடன் வாங்கி விட வேண்டியது தானே என்று கேட்கிறீர்களா..?

நிறைய கடன்

2019 – 20 நிதி ஆண்டில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் 7.03 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி ஓட்ட இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். இந்த 7.03 லட்சம் கோடி ரூபாய் கடனில், 6.6 லட்சம் கோடி ரூபாய் இதற்கு முன் கடன் வாங்கியதற்கு வட்டி செலுத்தவே சரியாக இருக்கிறது. இந்த நிலையில் மேற்கொண்டு கடன் வாங்கினால் அரசின் நிலை என்ன ஆவது..? இந்த மோசமான நிலையை இந்த பட்ஜெட்டாவது மாற்றுமா..? பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் போது மேற்கொண்டு கடன் வாங்காமல் நாட்டை ஓட்டுவது சாத்தியமா..? பிப்ரவரி 01, 2020 அன்று தெரிந்து விடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »