Press "Enter" to skip to content

பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தியாவின் வரைபடம் – இரு ஊழியர்கள் பணிநீக்கம்

பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியான பிடிவியில் தவறான பாகிஸ்தான் வரைபடத்தைக் காட்டியதாக கூறி இரு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

பிடிவியில் காட்டப்பட்ட வரைபடத்தில் இந்தியாவுடையது என காட்டப்பட்ட காஷ்மீர் பகுதி தங்களுடையது என்கிறது பாகிஸ்தான். அந்தப் பகுதி தங்களுடையது என இந்தியாவும் உரிமை கொண்டாடுகிறது.

மேலும் ஜூன் 8ஆம் தேதி இது குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையில் விவாதிக்கப்பட்டது.

அதன்பின் மேலவைத் தலைவர் சாதிக் சஞ்சரானி தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம் இது குறித்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

சமூக வலைதளத்தில் கண்டனம்

இது தொடர்பாக இரு ஊழியர்கள் நீக்கப்பட்டதாக பிடிவி டிவிட்டரில் தெரிவித்தது.

ஜூன் 6ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டின் தவறான வரைபடம் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இதற்கு காரணமான இரண்டு அதிகாரிகள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர் என்றது பிடிவி.

பாகிஸ்தானின் அமைச்சர்கள் சிலர் சமூக வலைதளத்தில் வெளிப்படையாக பிடிவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சௌதாரி பவாத் ஹுஸைன் இந்த விஷயத்தில் பிடிவியின் தலைமை இயக்குனருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிடிவி தலைவர் அர்ஷத் கான் வெகு நாட்களாக பிடிவி தலைமை பொறுப்பில் உள்ளார், ஆனால் தாம் பிடிவிக்கு தலைவர் தூர்தர்ஷனுக்கு இல்லை என்பது அவருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று அவர் தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மனித உரிமை அமைச்சர் ஷிரின் மஸாரி, இது அலட்சியம் மற்றும் சோம்பேறித்தனத்தால் ஏற்பட்ட தவறு எனக் கூறியுள்ளார்.

“இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. ஆனால் அலட்சியம் மற்றும் சோம்பேறித்தனத்தால் ஏற்பட்ட தவறு. கூகுளில் இருந்து அப்படியே எடுத்து அதை சரி பார்க்காமல் செய்ததால் ஏற்பட்ட தவறு. சில ஆட்கள் வரைபடத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்”‘ என அவர் எழுதியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான்

இந்தியா – பாகிஸ்தான் இடையே காஷ்மீர் தொடர்பான பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது. ஆனால் காஷ்மீரின் பருவநிலையை கணிப்பது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டது.

கடந்த மாதம் இந்திய அரசு ஊடகம் மிர்பூர், முசாஃபராபாத் மற்றும் கில்ஜிட்-பால்டிஸ்தான் ஆகிய பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீரில் உள்ள பகுதிகளின் பருவநிலை அறிக்கையை ஒளிபரப்பு செய்தது.

பாகிஸ்தான் இது குறித்து கேள்வி எழுப்பியது. அதன்பின் பாகிஸ்தானும் ஸ்ரீநகர், புல்வாமா மற்றும் லடாக் ஆகியவற்றின் பருவநிலை அறிக்கையை வெளியிட்டது.

இரு நாடுகளும் தங்களுக்குள் காஷ்மீரைப் பிரித்துக்கொள்ளும் கட்டுப்பாட்டுக் கோட்டினை ஒட்டிய பகுதி, உலகிலேயே மிகுந்த ராணுவமயமான பகுதிகளில் ஒன்றாகும்.

கடந்த ஆகஸ்டு மாதம், இந்தியா தாம் நிர்வகிக்கும் காஷ்மீரின் சிறப்புரிமைகளை ரத்து செய்து அதன் மாநில அந்தஸ்தையும் மாற்றி, ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »