Press "Enter" to skip to content

குரேஷியா நிலநடுக்கம்: 7 பேர் பலி, ஒரு நகரில் பாதி அழிந்தது

ஐரோப்பிய நாடான குரேஷியாவில் 6.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நில அதிர்வை கண்டுபிடிக்கும் நவீன இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் குரேஷியாவில் நடக்கும் மிகப் பெரிய நிலநடுக்கம் இது என்று அமெரிக்காவின் புவியியல் அமைப்பான யுஎஸ் ஜியாலஜிக்கல் மேலாய்வு தெரிவித்துள்ளது. இதே அளவிலான நிலநடுக்கம் ஒன்று குரேஷிய தலைநகர் ஜாக்ரெப் அருகே 1880ல் நிகழ்ந்துள்ளது.

பெட்ரீனியா எனுமிடத்தில் ஒரு 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளார் என்று, செவ்வாய்க்கிழமை, அங்கு அந்த நகரத்திற்கு சென்ற அந்நாட்டின் பிரதமர் ஆண்ட்ரே ப்லென்கோவிட்ச் தெரிவித்துள்ளார்.

அதன் அருகே உள்ள க்ளினா எனும் நகரத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என்று துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.

குரேஷிய நிலநடுக்கம்.

ஜாஜினா எனுமிடத்தில் தேவாலயத்தின் கட்டட இடிபாடுகளுக்கு இடையே இன்னொருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

பாதி நகரம் அழிந்துவிட்டதாகவும் இடிபாடுகளுக்கு இடையே இருந்து மக்கள் மீட்கப்பட்டு வருவதாகவும் பெட்ரீனியா நகரின் மேயர் தெரிவித்துள்ளார். இந்த நகரத்தில் சுமார் 20,000 பேர் வசித்து வருகின்றனர்.

குரேஷியாவின் தலைநகர் ஜார்ஜெப்பிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

பெட்ரீனியாவில் உள்ள நகரவையின் இடிபாடுகளிலிருந்து ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டதாக குரேஷிய நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்டை நாடுகளான போஸ்னியா மற்றும் செர்பியாவில் மட்டுமல்லாது இத்தாலி வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஸ்லோவேனியா மற்றும் குரேஷியா ஆகிய நாடுகளுக்கு சொந்தமான கர்ஷ்கோ அணுமின் நிலையமும் ஸ்லோவேனியாவால் மூடப்பட்டுள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெட்ரீனியா மக்களுக்கு பேரிடி

கை டொ லானே, பிபிசி பால்கன்ஸ் செய்தியாளர்

நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு மணி நேரதுக்குள் குரேஷியாவின் பிரதமர் மற்றும் அதிபர் ஆகியோர் பெட்ரீனியா நகரில் ஏற்பட்ட சேதங்களைச் சென்று பார்வையிட்டனர்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சண்டையில் பெரிதும் அழிந்த ரஷ்ய பிரதேசமான செசன்யாவின் தலைநகர் க்ரோஸ்னி உடன் பெட்ரீனியா நகரின் சேதத்தை ஒப்பிட்டார் அதிபர் ஜோரான் மிலன்கோவிட்ச்.

பெட்ரீனியா நகரம் மனிதர்கள் வாழ இனிமேலும் பாதுகாப்பானது அல்ல என்றும் பிரதமர் ஆண்ட்ரே ப்லென்கோவிட்ச் தெரிவித்துள்ளார்.

ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது; இங்கு இருப்பது பாதுகாப்பானதல்ல என்பதால் மக்கள் இங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

20 ஆயிரம் பேர் வசிக்கும் பெட்ரிஞ்சா நகரின் தற்போதைய நிலை.

1990களில் நடைபெற்ற குரேஷிய விடுதலை போருக்குப் பின்பு பெட்ரீனியா நகர மக்கள் தங்கள் நகரை மீண்டும் கட்டியெழுப்ப முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உண்டான அழிவு அவர்களுக்குப் பேரிடியாக இருக்கும்.

பாரம்பரிய தொழில் துறை சரிவால் சமீபத்தில் உண்டான பொருளாதார நெருக்கடியையும் அவர்கள் எதிர்கொண்டு வந்தனர்.

மறு கட்டுமானங்களை மேற்கொள்வதற்காக நிதி ஒதுக்கப்படும் என்று குரேஷிய தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

ஆனால் பெட்ரீனியா மக்கள் தங்கள் புத்தாண்டை தற்காலிக முகாம்களில்தான் கழிக்க வேண்டியிருக்கும். அவர்கள் விரைவில் வீடு திரும்புவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஒரு மழலையர் பள்ளி இடிந்து விழுந்தது. ஆனால் அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »