Press "Enter" to skip to content

வரலாற்றில் வெற்றி பெற்ற முதல் பெண் தொழிலதிபரின் ரகசிய கடிதங்கள்

வரலாறு பதிவு செய்யப்பட்ட தொடக்க காலத்தில் வெற்றி பெற்ற முதல் பெண் தொழிலதிபரின் செயல்பாடு குறித்த ஆழமான விஷயங்களை புதிய ஆராய்ச்சி ஒன்று வெளியில் கொண்டுவந்துள்ளது.

நீங்கள் நினைப்பதைவிட முந்தைய காலத்தில் அவர் தடம் பதித்திருக்கிறார்.

கி.மு. 1870 ஐ ஒட்டிய காலத்தில் வடக்கு இராக்கில் அஸ்ஸுர் என்ற நகரத்தைச் சேர்ந்த அஹாஹா என்ற பெண், நிதி மோசடி ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார்.

அஸ்ஸுர் நகரில் இருந்து தொலைதூரத்தில் துருக்கியில் கானேஷ் என்ற நகருடன் வர்த்கத்தில் ஈடுபட்டார் அஹாஹா. கழுதைகள் இழுத்துச் செல்லும் சரக்கு வண்டிகளை இயக்க அவரும், சில முதலீட்டாளர்களும் சேர்ந்து வெள்ளிகளை அளித்தனர்.

கானேஷ் நகருக்கு தகரம் மற்றும் ஜவுளிகள் அதன் மூலம் கொண்டு செல்லப்பட்டன. அவை வெள்ளிக்கு ஈடாக விற்கப்பட்டன. அதில் பெருமளவு லாபம் கிடைத்தது. ஆனால் அஹாஹாவின் லாபத்துக்கான பங்கு மட்டும் கணக்கில் வரவில்லை. அவருடைய சகோதரர்களில் ஒருவரான புஜாஜு என்பவர் மோசடி செய்வதாகத் தெரிந்தது.ஆகவே இந்த விஷயத்தில் உதவி கேட்டு தனது இன்னொரு சகோதரர் அஸ்ஸுர் முட்டப்பிலுக்கு அந்தப் பெண் களிமண் பலகையில் எழுத்தாணி கொண்டு கடிதம் எழுதினார்.

“இதைத் தவிர எனக்கு வேறு பணம் கிடையாது” என்று கியூனெய்பார்ம் என்ற குறியீட்டு வடிவத்தில் அவர் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். “எனக்குப் பாதிப்பு வராத வகையில் கவனமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். தனது வெள்ளியை மீட்டு, விரைவில் தகவல் அனுப்புமாறும் அதில் கூறியிருந்தார்.

“அவர்கள் வெள்ளியாகத் தருகிறார்களா என்பது குறித்து, அடுத்த சரக்கு வண்டியில் உங்களிடம் இருந்து விரிவான கடிதம் வர வேண்டும்” என்று இன்னொரு களிமண் பலகையில் அந்தப் பெண் எழுதியிருந்தார். “எனக்கு ஆதரவு காட்டி, பணப் பிரச்சினையில் இருந்து என்னைக் காப்பாற்ற வேண்டிய நேரம் இது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கானேஷ் நகரில் வியாபாரிகளின் இடிந்து போன வீடுகளின் இடிபாடுகளில் இருந்து கடந்த தசாப்தங்களில் மீட்கப்பட்ட 23 ஆயிரம் களிமண் பலகைகளில் அஹாஹாவின் கடிதங்களும் உள்ளன. அஸ்சிரிய அகழ்வாராய்ச்சியாளர்களுக்குச் சொந்தமான அந்த களிமண் பலகைகள், அஸ்ஸுரில் அவர்களது குடும்பத்தினருக்கு இடையில் நடந்த தகவல் பரிமாற்றங்களைத் தெரிவிப்பவையாக உள்ளன.

கழுதைகளால் இழுக்கப்படும் சரக்கு வண்டி சென்று சேர ஆறு வார காலம் ஆகும் தொலைவில் அந்த நகரம் உள்ளது. அந்த சமுதாயத்தில் பெண்கள் எந்த அளவுக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு செல்வாக்காக இருந்தனர், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களின் வாய்ப்புகளை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள், பிறகு ஆண்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்திய துறைகளில் அந்தக் காலக்கட்டத்தில் பெண்கள் எப்படி சாதித்தார்கள் என்பதைக் காட்டுவதாக அந்த களிமண் பலகைகள் உள்ளன.

மனிதகுலத்தின் வரலாறு பதிவு செய்யப்பட்ட காலத்தில், முதலாவது பெண் தொழிலதிபர், முதலாவது பெண் வங்கியாளர், முதலாவது பெண் முதலீட்டாளர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

வலிமையாக மற்றும் சுதந்திரமாக’

கானேஷ் நகரில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான கடிதங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் கி.மு. 1900 – 1850 காலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. அது அஸ்சிரிய வர்த்தகர்களின் தொடர்புகள் செழிப்பாக இருந்து, அந்தப் பிராந்தியத்தில் வளமை சேர்த்த காலக்கட்டமாக உள்ளது.

புதி சிந்தனைகள் முன்னுக்கு வந்த காலமாகவும் அது உள்ளது. புதிய வகையிலான முதலீடுகளை அஸ்சிரியர்கள் கண்டறிந்துள்ளனர். தங்களுடைய கடிதங்களை, தொழில்முறை எழுத்தாளர்களிடம் கூறி எழுதச் சொல்வதற்குப் பதிலாக, தாங்களே எழுதக் கூடிய ஆண்கள் மற்றும் பெண்கள் வாழ்ந்த காலமாகவும் அது இருந்துள்ளது.

பன்னெடுங்காலத்திற்கு முன்பே வணிகமும், புதுமை சிந்தனைகளும் ஆண்களுக்கு மட்டுமே உரியவையாக அல்லாமல், பெண்களும் தீவிரமாக செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்தக் கடிதங்கள் நிரூபிக்கின்றன.

கணவன்மார்கள் தொலைதூரங்களுக்குச் சென்று வர்த்தக ஒப்பந்தங்கள் செய்வது அல்லது வெளியில் சென்று வணிகம் செய்த நிலையில், வீட்டில் இருந்து வணிகத்தை பெண்கள் கவனித்துக் கொள்ளும் வழக்கமும் இருந்துள்ளது. ஆனால் அவர்களும் சொத்துகள் சம்பாதித்து, தங்களுடைய சொத்துகளை கையாண்டு வந்துள்ளனர். தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் படிப்படியாக அவர்கள் நல்ல பலம் பெற்றுள்ளனர்.

கடிதங்கள் சிறியதாக இருந்தாலும், பழங்கால வணிகத்தின் சிறப்புகளைத் தெரிவிக்கும் தகவல்கள் நிரம்பியதாக உள்ளன

“இந்தப் பெண்கள் வலிமையானவர்களாக, சுதந்திரமானவர்களாக இருந்துள்ளனர். தனியாக இருப்பதால் கணவர் வெளியில் சென்ற சமயத்தில் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை அவர்கள் ஏற்றிருக்கிறார்கள்” என்று பிரான்ஸ் நாட்டில் உள்ள அறிவியல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக இருக்கும் சிசிலி மிச்செல் தெரிவிக்கிறார்.

அஸ்ஸுர் மற்றும் கானேஷ் நகர பெண்கள் (Women of Assur and Kanesh) என்ற புத்தகத்தை இவர் எழுதியுள்ளார். 300-க்கும் மேற்பட்ட கடிதங்கள் மற்றும் பிற ஆவணங்களின் மூலம், பெண்கள் எந்த அளவுக்குப் போராடி, வெற்றி கண்டிருக்கிறார்கள் என்ற விரிவான மற்றும் ஆர்வம் தரும் தகவல்கள் அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. நாடகம் மற்றும் சாகச முயற்சிகளில் உற்சாகம் காட்டும் விஷயங்கள் நிறைந்திருந்தாலும், அந்தக் கடிதங்கள் உள்ளங்கை அளவுக்கு சிறியதாகவே உள்ளன.

வணிகம் செய்யும் பெண்கள் குறித்த தகவல்கள், அஸ்சிரிய வர்த்தக சமுதாயத்தினருடன் இணைந்ததாக இருக்கிறது. செல்வாக்கு மிகுந்த காலத்தில் அஸ்சிரியர்கள் மிகவும் வெற்றிகரமான மற்றும் கிழக்குப் பிராந்தியத்தில் நல்ல வர்த்தகத் தொடர்புகள் கொண்ட வியாபாரிகளாக இருந்துள்ளனர்.

300 கழுதைகள் வரை கொண்ட சரக்கு வண்டிகள் மலைப் பகுதிகள் மற்றும் மக்கள் வசிக்காத பகுதிகளில் வந்து சென்று கொண்டிருந்தன. கச்சாப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் ஆகியவை அவற்றில் கொண்டு செல்லப்பட்டன. களிமண் பலகை கடிதங்களும் கூட அதனுடன் சேர்ந்து பயணித்தன.

“ஆப்கானிஸ்தான் வைடூரியங்கள், பாகிஸ்தான் மாணிக்கக் கற்கள் உள்ளிட்டவை மத்திய ஆசியாவில் இருந்து தொடங்கி சர்வதேச வியாபாரத் தொடர்புகளை உருவாக்கி இருக்கின்றன. தகரம் ஈரான் அல்லது தூர கிழக்கு நாடுகளில் இருந்து வந்திருக்கலாம்” ன்று நெதர்லாந்தில் உள்ள லெய்டென் பல்கலைக்கழகத்தில் அஸ்ரியர்கள் பற்றிய ஆராய்ச்சியாளர் ஜன் கெர்ரிட் டெர்க்சென் கூறியுள்ளார்.

இவரும் கானேஷ் களிமண் பலகைகள் குறித்து ஆய்வு செய்துள்ளார்.

தெற்கு இராக்கில் பாபிலோனியாவில் இருந்து ஜவுளிகளையும், இந்தப் பொருட்களையும் அஸ்ஸுரின் நுழைவாயிலுக்கு வெளிநாட்டு வர்த்தகர்கள் கொண்டு சென்றிருக்கிறார்கள். அவற்றை அஸ்சிரியன்களுக்கு விற்றுள்ளனர். துருக்கியில் உள்ள கானேஷ் மற்றும் பிற நகரங்களுக்கு எடுத்துச் சென்று தங்கம் மற்றும் வெள்ளிக்கு மாற்றாக விற்பதற்கு அங்கு அவை பெட்டிகளில் வைத்து சரக்கு வண்டிகளில் அனுப்பப்பட்டுள்ளன.

வணிகத்திற்கு குழப்பமான ஒரு பொருளை அவர்கள் கைமாற்றிக் கொண்டுள்ளனர். “பை” என்று பொருள்தரக் கூடிய “நருகம்” என்பதை அவர்கள் விற்பனைக்கான பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர். வியாபாரிகளால் கொண்டு செல்லப்படும் சரக்கு வண்டிகளுக்கு பல ஆண்டுகளாக பரிமாறறம் செய்வதற்கு அஸ்சிரிய முதலீட்டாளர்கள் தொகுப்பாக அளித்த வெள்ளிகள் கொண்ட கூட்டு பங்கு நிறுவனத்தை அது குறிப்பிடுகிறது.

வணிகத்துக்காக ரகசிய மொழி ஒன்றையும் வியாபாரிகள் பயன்படுத்தி உள்ளனர். “களிமண் பலகை காலாவதியாகிவிட்டது” என்றால், கடனை திருப்பிச் செலுத்தியாகிவிட்டது, களிமண் பலகை ஒப்பந்தப் பதிவு ரத்தாகிவிட்டது என்று பொருள். “பசியில் உள்ள வெள்ளி” என்பது, முதலீடு செய்யப்படாமல், லாபம் ஈட்டுவதற்குப் பதிலாக பயன்பாடின்றி கிடக்கும் வெள்ளியைக் குறிப்பதாக இருந்துள்ளது.

ஏற்றுமதிக்கான ஜவுளிகளை தயாரிப்பது, வியாபாரிகளுக்குக் கடன் அளித்தல், வீடுகள் வாங்குதல் மற்றும் விற்பது, நருகம் திட்டங்களில் முதலீடு செய்வது என வர்த்தகத் தொடர்பிலான விஷயங்களில் அஸ்சிரிய பெண்கள் தீவிர ஈடுபாடு கொண்டிருந்துள்ளனர்.

நெசவுத் தொழிலில் அவர்களுக்கு நல்ல திறமை இருந்ததால், தங்களுக்கென வெள்ளிகளை அவர்களால் ஈட்ட முடிந்தது. நல்ல விலைகள் பெறுவதற்காக வெளிநாட்டு சந்தையில் உள்ள தேவைகள் குறித்தும், வெளிநாட்டினர் விரும்பக் கூடிய ஃபேஷன்கள் குறித்தும் அந்தப் பெண்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். தங்களது லாபத்தில் இழப்பு ஏற்படுத்தும் வரிகள் மற்றும் இதர செலவுகள் பற்றியும் அவர்கள் அறிந்து வைத்திருந்தனர்.

“உண்மையில் அவர்கள் கணக்காளர்களாக இருந்துள்ளனர்; தங்களது ஜவுளிகளுக்கு மாற்றாக எதைப் பெற வேண்டும் என்பதை அவர்கள் நன்றாக அறிந்திருந்தனர் . ஜவுளிகள் விற்பதன் மூலம் ஈட்டிய இந்தப் பணத்தை உணவுக்கு, வீட்டுக்கு, தினசரி வாழ்வியல் தேவைகளுக்கு செலவிட்டதுடன், முதலீடுகளும் செய்துள்ளனர்” என்று அந்தப் பெண்கள் குறித்த புதிய ஆவணப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் உள்ள மிச்செல் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் நகரமான கானேஷ் நகரம், குல்டெப்பே மவுண்ட் என்றும் அழைக்கப்பட்டது. அந்த இடம் இப்போது துருக்கியில் உள்ளது

`ஆவணக் காப்பகங்களின் காவலர்கள்’

வியாபாரத்தில் அவர்கள் இந்த அளவுக்கு நுணுக்கம் கொண்டிருந்ததால், பெண்களுக்கு பழக்கமில்லாததாகக் கருதப்பட்ட துறைகளிலும் அவர்கள் ஈடுபட்டனர். தங்கள் கணவரின் நம்பகமான பங்குதாரராக அவர்கள் இருந்துள்ளனர். தினசரி வியாபாரத்தையும், அவசர தேவைகளையும் கவனித்துக் கொள்ளக் கூடிய எழுதப் படிக்கத் தெரிந்த மனைவி இருப்பதன் மூலம் வர்த்தகர்கள் பயனடைந்துள்ளனர்.

அஸ்சிரிய வியாபாரி ஒருவர் தன் மனைவி இஷ்டர்-பஷ்டிக்கு பின்வருமாறு எழுதியுள்ளார்: “அவசரம்! உமது வியாபாரத்தின் பாக்கியை நேர் செய்துவிடவும். லிமிஷாரின் மகனின் தங்கத்தை வாங்கி எனக்கு அனுப்பவும்… தயவுசெய்து, என் தகவல் பலகைகளை பத்திரமாக வைக்கவும் ”நிதி குறித்த தகவல்களை அறிய அல்லது வணிக விஷயத்தை நேர் செய்வதற்கு, தனிப்பட்ட தகவல் பலகைகளின் தொகுப்புகளில் இருந்து, குறிப்பிட்ட ஒரு களிமண் பலகையை எடுத்து பார்க்கும்படி மனைவிக்கு கணவர் தகவல் அனுப்பியுள்ளார்.

“அவர்கள் தான் வீட்டில் இருப்பவர்கள் என்பதால், ஆவணக் காப்பகத்தின் பாதுகாவலர்களாக அவர்கள் தான் இருந்துள்ளனர்” என்று அந்தப் பெண்கள் குறித்து மிச்செல் கூறியுள்ளார். “இந்த ஒப்பந்தங்கள் ஏராளமான பணம் தொடர்பானவை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக கடன் ஒப்பந்தங்கள் போன்றவையாக அவை இருந்தன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல தங்கள் கணவர் அல்லது சகோதரர்களுக்கு அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கைகளை அனுப்பவும் பெண்கள் தயங்கியது கிடையாது. “உங்களிடம் இருந்து நல்ல செய்தியை இரண்டு விரல்கள் அகலம் கொண்ட களிமண் பலகை கூட உங்களால் அனுப்ப முடியவில்லையா?” என்று இரண்டு ஆடவர்களுக்கு நரம்டும் என்ற அஸ்சிரிய பெண் எழுதியுள்ளார்.

கடன் மற்றும் வியாபார நட்டம் தொடர்பான பிரச்சினை குறித்து அந்தப் பெண் புகாராகக் குறிப்பிட்டு, அதைத் தீர்த்துக் கொள்ளுமாறு அந்த ஆடவர்களை அந்தப் பெண் கேட்டுக் கொண்டிருக்கிறார். “ஜவுளிகளின் விலையை எனக்கு அனுப்புங்கள். எனக்கு உற்சாகத்தைத் தாருங்கள்” என்று கூறி அதை அவர் முடித்துள்ளார். மற்றொரு களிமண் பலகையில், வரத் தவறிய பட்டுவாடா பற்றி உள்ளது: “பேராசையாக இருந்து எனக்குப் பாதகம் செய்ய வேண்டாம்!” என்று அதில் உள்ளது.

பழங்கால அண்மைக் கிழக்கு நாடுகளில் சில சமுதாயங்களில் நிலவிய பழக்கவழக்கங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக, இந்தப் பெண்களின் சுதந்திரமான செயல்பாடு உள்ளது.

அருகில் தெற்கு இராக்கில் உள்ள பாபிலோனியா பழக்கவழக்கத்தில் இருந்து இது மாறுபட்டிருந்தது. கானேஷ் நகரைப் போல அஸ்ஸுர் நகரிலும், கணவர் மற்றும் மனைவி என யார் வேண்டுமானாலும் விவாகரத்து கோரலாம், இரண்டுமே ஒரே மாதிரியாக கையாளப்படும் நடைமுறை இருந்துள்ளது என்று மிச்செல் கூறியுள்ளார்.

“ஆனால் அதே காலக்கட்டத்தில் பாபிலோனியாவில், பாபிலோனியாவின் தெற்குப் பகுதியில் பெண்கள் விவாகரத்து கேட்க முடியாது, பாபிலோனியாவின் வடக்குப் பகுதியில் பெண்கள் விவாகரத்து கேட்டால், மரண தண்டனை விதிக்கப்படும் நடைமுறை இருந்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த அளவுக்கு பலமான பொருளாதாக செல்வாக்கு மிகுந்திருந்ததால், பெண்களின் தனிப்பட்ட வாழ்வு நல்ல நிலையில் இருந்தது. ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதை அல்லது தாங்களாக பயணம் செல்வதைத் தடை செய்யும் வகையில் திருமண ஒப்பந்தப் பிரிவுகள் சேர்க்கப்படும் நிலை அப்போது இருந்துள்ளது.

“இராம்-அஸ்ஸுர் என்பவரின் மகள் சுஹ்கனாவை அஸ்ஸுர் மாலிக் திருமணம் செய்து கொண்டார். அஸ்ஸுர் மாலிக் எங்கு சென்றாலும் மனைவியையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும். கானேஷ் நகரில் இன்னொரு பெண்ணை அவரால் திருமணம் செய்து கொள்ள முடியாது” என்பது போன்ற விதிமுறைகள் சேர்க்கப் பட்டிருந்தன.

ஒரு காலக்கட்டத்தில், அஸ்ஸுர் மற்றும் கானேஷ் நகரங்களுக்கு இடையிலான வர்த்தகத் தொடர்பு குறைந்துவிட்டது. அதற்கான காரணம் தெரியவில்லை. அதனால், கானேஷ் நகரம் காலியாகிவிட்டது. வியாபாரம், சிந்தனை மற்றும் கலாச்சார பரிமாற்றத்தின் மையங்களாக மற்ற நகரங்கள் உருவெடுத்தன. ஆனால் வீடுகள் தீப்பிடித்த சமயங்களில், இந்தக் களிமண் பலகைகள் இறுகிவிட்டன. வீட்டில் இருந்து அவர்கள் வெளியேறிவிட்டாலும், பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து அவை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

வரலாற்றில் ராணிகள் அல்லது உயர்வான பெண் துறவிகளைப் பற்றியதாக அல்லாமல், மற்ற பெண்களின் அனுபவங்களைப் படம் பிடித்துக் காட்டுபவையாக அவை உள்ளன. அடுத்த நாளை எப்படி சந்திக்கப் போகிறோம் என்ற நிலையில் வாழ்ந்த பெண்களின் வாழ்வியலை அவை காட்டுகின்றன. மிச்செல் கூறுவதைப் போல, மற்ற மெசபடோமிய நகரங்களில் பெண்கள் எழுதிய கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றாலும், “கனேஷ் கடிதங்கள் தனித்துவமானவை” என்பதாக உள்ளன.

கானேஷ் நகரில் கிடைத்த பாதிக்கும் மேற்பட்ட களிமண் பலகைகள் இன்னும் படிக்கப்படவில்லை. இன்னும் ஏராளமான ரகசியங்கள் அவற்றில் இருந்து கிடைக்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »