Press "Enter" to skip to content

கொரோனா பற்றி பரவும் தவறான செய்திகள் மக்கள் உயிரைப் பறிக்கின்றன: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

பட மூலாதாரம், Getty Images

சமூக வலைத் தளங்களில் பரவும் கொரோனா தொடர்பான தவறான செய்திகள் மக்களைக் கொல்கின்றன என எச்சரித்து இருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

கொரோனா பெருந்தொற்று மற்றும் கொரோனா தடுப்பூசி குறித்து ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் பரவும் தவறான செய்திகள் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவருக்கு இப்படி பதிலளித்தார் பைடன்.

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை, போலி செய்திகளை எதிர்கொள்ள சமூக வலைதள நிறுவனங்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஃபேஸ்புக் கூறியுள்ளது.

“அவர்கள் மக்களைக் கொல்கிறார்கள்” என பைடன் பத்திரிகையாளர்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை கூறினார். “கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மத்தியில் மட்டுமே கொரோனா பெருந்தொற்று இருக்கிறது” எனவும் அவர் கூறினார்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் தொற்றால் இறப்பவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதே இதற்குக் காரணம் என அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டு

கொரோனா தடுப்பூசி தொடர்பான போலி செய்திகளை எதிர்கொள்ள ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என, கடந்த வெள்ளிக்கிழமை கூறினார் வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் ஜென் சாகி.

ஜென் சாகி

பட மூலாதாரம், Getty Images

“அவர்கள் நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்கள்”. “இருப்பினும் இன்னும் நிறைய முன்னெடுப்புகள் எடுக்கப்பட வேண்டும்” என்கிறார் அவர்.

“ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் கவனத்தை திசை திருப்ப முடியாது” என கூறியுள்ளார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கெவின் மெக்கலிஸ்டர்.

“இதுவரை 1.8 கோடிக்கும் அதிகமான கொரோனா தொடர்பான போலி செய்திகளை ஃபேஸ்புக் நீக்கியுள்ளது. மேலும் தொடர்ந்து ஃபேஸ்புக்கின் விதிகளை மீறிய கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளன” என ஃபேஸ்புக்கின் செய்தி அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

ஃபேஸ்புக் தொடர்ந்து தன் தணிக்கைகளுக்காக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா தொடர்பான தவறான செய்திகள் இப்போதும் அத்தளத்தில் காணப்படுகின்றன.

“இது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு பெருந்தொற்றாகி வருகிறது என்கிற தெளிவான செய்தியைப் பார்க்க முடிகிறது” என அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் ராசெல்லி வலென்ஸ்கி பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

அமெரிக்காவில் 67.9 சதவீத பெரியவர்கள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர். 59.2 சதவீதம் பேருக்கு இரு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களில் பலரும், தடுப்பூசியை நம்பாததால், அதைச் செலுத்திக் கொள்ள மறுக்கிறார்கள்.

ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலை தளங்களில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான செயற்பாட்டாளர்களுக்கு 5.9 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்பவர்களாக இருக்கிறார்கள் என கடந்த மார்ச் மாதம் ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கொரோனா தடுப்பூசி தொடர்பான தவறான செய்திகளை கையாள்வது தொடர்பாக, அதே மாதத்தில் ஃபேஸ்புக், யூடியூப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களின் முதன்மைச் செயல் அதிகாரிகளான மார்க் சக்கர்பெர்க், சுந்தர் பிச்சை, ஜாக் டார்சி ஆகியோரை அமெரிக்க காங்கிரஸ் அழைத்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

நிறுவனத் தலைவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி தொடர்பான தவறான செய்திகளை தங்கள் தளங்களில் எப்படி எதிர்கொண்டார்கள் என விளக்கமளித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »