Press "Enter" to skip to content

டோங்கா சுனாமி: “27 மணி நேரம் கடலில் மிதந்து உயிர் பிழைத்தேன்” – தப்பியவரின் மிரள வைக்கும் கதை

பட மூலாதாரம், Reuters

டோங்காவைத் தாக்கிய சுனாமியில் இருந்து தப்பிக்க, கடலில் ஒரு நாளுக்கு மேல் தான் மிதந்ததாகக் கூறும் ஒருவரின் கதை, உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த தீவு தேசத்தை சனிக்கிழமையன்று எரிமலை வெடிப்பும் சுனாமியும் தாக்கியது. அட்டாடா தீவைச் சேர்ந்த லிசாலா ஃபோலா என்பவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது பேரலை.

கடலில் தான் மிதக்கும் மரக்கட்டையைப் பிடித்துக் கொண்டு 27 மணி நேரம் மிதந்த பிறகு, மீண்டும் கரையை அடைந்ததாக அவர் கூறினார்.

இந்த சுனாமி பாதிப்பின் அளவு குறித்து இன்னும் தெரியவில்லை என்றாலும், டோங்காவில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிபிசியின் நியூஸ்டே நிகழ்ச்சியில் பேசிய 57 வயதான ஃபோலாவ், “கடல் அலைகள் என்னை நோக்கி வருவதை கண்டு பயந்தேன். ஆனால், கடவுள் என்னைக் காப்பாற்றுவார் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது,” என்று கூறினார்.

“நான் நீரில் இருந்தபோது, கடல் எட்டு முறை என்னை அதன் கீழ் இழுத்து சென்றது எனக்கு நினைவிருக்கிறது. என் கால்கள் செயலிழந்தன. அவை செயல்படவில்லை என்றே சொல்ல வேண்டும்,” என்று தமது அனுபவத்தை விளக்கினார்.

“ஒரு கட்டத்தில் கடல் என்னைச் சுழற்றி நீருக்கடியில் அழுத்திச் சென்றது,” என்கிறார் அவர்.

பின்னர், கடல் மேல்பரப்பில் மிதந்த மரக்கட்டையை தன்னால்பிடிக்க முடிந்தது என்றார்.

“எனது மகன் நிலத்திலிருந்து அழைப்பதை என்னால் கேட்க முடிந்தது. நான் பதிலளிக்க விரும்பவில்லை, ஏனென்றால் என்னைக் கண்டுபிடிக்க அவன் கடலுக்குள் இறங்கி நீந்துவதை நான் விரும்பவில்லை. வெறும் மரத்தடியைப் பிடித்துக்கொண்டு நான் சுழன்றுக்கொண்டிருந்தேன்,” என்று ஃபோலாவ் கூறினார்.

Lisala Folau (second from left) with other Atata survivors at a radio interview on the main island

பட மூலாதாரம், Reuters

“கடலில் தான் வாழ்வும் மரணமும் இருக்கிறது என்று அப்போது [என்] மனதில் தோன்றியது. நாம் கரையை அடையும் வரை, நாம் உயிருடன் இருக்கிறோமா அல்லது இறந்துவிட்டோமா என்பது நமக்கு தெரியும்.”

இதற்கிடையில், அந்நாட்டிற்கு பல நாடுகளின் அரசு, கப்பல்களும் விமானங்களும் அனுப்பவதன் மூலம் உதவி கிடைப்பது இப்போது தொடங்கியுள்ளது.

தீவை இணைத்த கேபிள் தொடர்புகள் துண்டிப்பு

டோங்காவை வெளி உலகத்துடன் இணைக்கும் கடலுக்கு அடியில் உள்ள ஒரே கேபிள், இரண்டு இடங்களில் உடைந்ததால், தகவல் தொடர்புகள் முடங்கியுள்ளன.

வெள்ளிக்கிழமையன்று முக்கிய தீவான டோங்காடாபுவை வந்தடைந்த நியூசிலாந்து கப்பல், அங்கு தரையிறங்கிய முதல் வெளிநாட்டு உதவி வழங்கும் பெரிய கப்பல் ஆகும்.

இது 2 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் தண்ணீரை கடலில் இருந்து உறிஞ்சியது. அந்த கப்பலில் ஒரு உப்புநீக்கும் ஆலை உள்ளது. அதன் மூலம் ஒவ்வொரு நாளும் 70 ஆயிரம் லிட்டர் சுத்தமான தண்ணீரை உற்பத்தி செய்ய முடியும்.

பசிபிக் தேசத்திற்கு சுத்தமான நீர் விநியோகமே முதன்மையானது என்று ஐ.நா கூறியுள்ளது.

இருப்பினும், பிரதான தீவில் நீர் பரிசோதனை செய்யப்பட்டபோது, அது குடிப்பதற்கு பாதுகாப்பானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“டோங்காடாபுவில் உள்ள சில சமூகத்தினர் குடிநீர் வசதி பெற முடியவில்லை. வெளி தீவுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது” என்று நியூசிலாந்து அரசு கூறியுள்ளது.

காணாமல் போனவர்கள் பற்றிய அறிக்கைகள் வெளிவந்தாலும், டோங்கனைச் சேர்ந்த இருவரும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவரும் என இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாகவே உள்ளது.

தனது மிகப்பெரிய கப்பலான, எச்.எம்.ஏ.எஸ் அடிலெயிட்டை ஆஸ்திரேலியா, வெள்ளிக்கிழமை டோங்காவிற்கு அனுப்பியுள்ளது. அடுத்த வாரம் நடுப்பகுதியில் அது அங்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கப்பலில் உலங்கூர்திகளை கொண்டு செல்ல முடியும். இதன்மூலம் டோங்காவின் சிறிய வெளிப்புற தீவுகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல அவை பயன்படுத்தப்படலாம்.

Australian Defence Forces members have already brought some supplies into Tonga

பட மூலாதாரம், Reuters

தனது கப்பலான எச்.எம்.எஸ். ஸ்பேயை பிரிட்டன் டோங்காவிற்கு மீண்டும் அனுப்புவதாகவும், ஏற்கெனவே ஆஸ்திரேலிய கப்பலுடன் உதவிப் பொருட்களை அனுப்பியதாகவும் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

“டோங்காவில் மீட்பு பணிக்கு உதவ பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றும். மேலும் எங்கள் நீண்டகால காமன்வெல்த் கூட்டாளருக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளது,” என்று பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென் வாலஸ் கூறினார்.

எரிமலை வெடிப்புக்குப் பிறகு முதல் சில நாட்களில் சர்வதேச உதவிகள் நிறுத்தப்பட்டது. ஏனெனில், எரிமலையின் சாம்பல் போர்வை டோங்காடாபுவில் உள்ள விமான நிலையத்தின் ஓடுபாதையை பயன்படுத்த முடியாததாக மாற்றியது.

நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், அவசர உதவி விமானங்கள் தரையிறங்கக்கூடிய வகையில், சாம்பலை தங்களின் சொந்த முயற்சியில் அகற்றுவதில் பல நாட்கள் செலவிட்டனர்.

குடிநீர், உப்புநீக்கும் கருவிகள், சுகாதாரம், தங்குமிடம் வசதிக்கு தேவையானவை, மருத்துவ கருவிகள் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்களுடன், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து முதல் இரண்டு விமானங்கள் வியாழக்கிழமையன்று தரையிறங்கின.

நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இல்லாத இந்த தேசத்தில், கோவிட் தொற்று ஏற்படுபவதைப் பற்றி டோங்கன் அதிகாரிகள் கவலை தெரிவித்ததால், தொடர்புயில்லாத விநியோகத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை அங்கு ஒரே ஒரு உறுதிப்படுத்தப்பட்ட தொற்று பாதிப்பு மட்டுமே உள்ளது. இது 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் கண்டறியப்பட்டது.

வியாழக்கிழமையன்று, விமானத்தில் இருந்த ஒரு குழு உறுப்பினருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இரண்டாவது ஆஸ்திரேலிய விமானம் நடுவானில் திருப்பி அனுப்பப்பட்டது.

கடற்படை மூலம் மிகப் பெரிய அளவிலான உதவிகளை கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அடிப்படை தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் மூலம் டோங்காவுடனான தொடர்புகள் மெதுவாக மீட்டெடுக்கப்படுகின்றன.

எரிமலை வெடிப்பு காரணமாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் மக்கள் வாழும் தீவை உலகத்துடன் இணைக்கும் ஒரே இணைய கேபிள் துண்டிக்கப்பட்டது. புதன்கிழமை வரை, பேரழிவு பற்றிய அனைத்து தகவல்களும் தீவில் உள்ள செயற்கைக்கோள் தொலைபேசிகளைக் கொண்ட சில நிறுவனங்களிலிருந்து வந்தன.

உதவியில் ஒளியும் அரசியல்

சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் உதவிகளை அனுப்பி வருகின்றன.

ஜப்பான் தனது சொந்த ராணுவ விமானம் ஒன்றை வியாழன் அன்று விநியோகம் செய்ய அனுப்பியது.

Japan has prepared a Hercules carrier to bring aid to the island

பட மூலாதாரம், Reuters

சீனாவும் நிவாரணப் பண உதவி மற்று அவசரகாலப் பொருட்கள் வழங்கும் ஒரு பகுதியாக 100,000 டாலர்கள் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

வியாழக்கிழமையன்று பெய்ஜிங்கில் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், “முன்னோக்கிச் செல்லும்போது, டோங்காவின் தேவைகள் மற்றும் சூழ்நிலை அடிப்படையில் சீனா தொடர்ந்து பணம் மற்றும் பொருட்களை வழங்கும்,” என்று கூறினார்.

டோங்கா பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றாகும். இது சீனாவிடம் இருந்து கடன்கள் மற்றும் நன்கொடைகள் பெறும் பகுதிகளில் அதிகம் போட்டியிடும் ஒரு பகுதியாகும்.

ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாக சீனா இப்போது வெளிநாட்டு உதவிகளை வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த வார தொடக்கத்தில், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் இவ்வாறு ட்வீட் செய்தார்: “டோங்காவிற்கு முதல் மற்றும் முதன்மையான உதவியை ஆஸ்திரேலியா வழங்க வேண்டும். இல்லையெனில் சீனா அங்கேயே இருக்கும்.”

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »