Press "Enter" to skip to content

ஹாட்ரிக் கோல் மழை பொழிந்த மெஸ்ஸி- அர்ஜென்டினாவுக்காக 100 கோல் அடித்து சாதனை

பட மூலாதாரம், Getty Images

அர்ஜென்டினா – குரசாவ் அணிகளுக்கு இடையேயான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். மேலும், அர்ஜென்டினா அணிக்காக தனது 100வது கோலையை இந்த ஆட்டத்தில் அவர் எட்டினார். மெஸ்ஸியின் கோல்மழையால் 7-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது.

கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்தாட்ட தொடரில் கோப்பையை வென்று அசத்திய அர்ஜென்டினா அணி அதற்கு பிந்தைய போட்டிகளிலும் `சாம்பியன்` என்ற அந்தஸ்துடன் உற்சாகமாக விளையாடி வருகிறது. குரசவ்- அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான சர்வதேச நட்பு ரீதியிலான ஆட்டம் அர்ஜென்டினாவில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி படைக்கப் போகும் அந்த சாதனையை காண ஒட்டுமொத்த மைதானமும் காத்திருந்தது. போட்டி தொடங்கியதுமே 11 மற்றும் 13வது நிமிடங்களில் மெஸ்ஸி கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. முதல் இருபது நிமிடங்களுக்கு குரசவ் அணி அர்ஜென்டினாவுக்கு எதிராக தாக்குப்பிடித்து ஆடியது.

ஆனால், 35 வயதான மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்ததுமே குரசாவ் அணியின் நம்பிக்கை தகர்ந்துபோனது. மேலும் மெஸ்ஸியின் கோலை மைதானத்தில் குழுமியிருந்த 43000 ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடினர். காரணம், அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி அடித்த 100வது கோல் அது.

சர்வதேச அளவில் 100 கோல்கள் என்ற கணக்கை கடந்த மூன்றாவது வீரர், தென் அமெரிக்காவைச் சேர்ந்த முதல் கால்பந்தாட்ட ஆண் வீரர் என்ற சாதனையை இதன் மூலம் மெஸ்ஸி படைத்தார். ஒட்டுமொத்தமாக, தென் அமெரிக்க கால்பந்தாட்டத்தை பொறுத்தவரை பிரேசில் வீராங்கனை மார்தா 109 கோல்களுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

கடந்த 18 டிசம்பர் 2022 அன்று உலகக் கோப்பை கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் வென்று அர்ஜென்டினா 36 ஆண்டுகளில் தனது முதல் கோப்பையை கைப்பற்றியிருந்தது. அதிலிருந்து சரியாக 100வது நாளில் சொந்த நாட்டுக்கான தனது நூறாவது கோலை மெஸ்ஸி அடித்தார்.

Lionel Messi 100th goal

பட மூலாதாரம், Getty Images

மெஸ்ஸி கோல் அடித்த அடுத்த மூன்று நிமிடங்களில் அர்ஜென்டினாவின் மற்றொரு கால்பந்தாட்ட வீரரான நிக்கோலஸ் கோன்சாலஸ் கோல் அடிக்க 2-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. 33வது நிமிடத்தில் மெஸ்ஸி மீண்டும் ஒரு கோல் அடித்து மைதானத்தில் இருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அடுத்த இரண்டு நிமிடங்களில் மெஸ்ஸி ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அர்ஜென்டினா வீரர் என்சோ ஃபெர்னாண்டஸ் கோல் அடித்தார்.

இந்த கோலை ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பதற்குள் 37வது நிமிடத்தில் மெஸ்ஸி தனது ஹாட்ரிக் கோலை அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றார். நட்பு ரீதியிலான ஆட்டம் என்றபோதிலும், அர்ஜென்டினா மண்ணில் நடைபெறும் ஆட்டத்தில் மெஸ்ஸி தனது அணிக்கான 100வது கோலை அடித்தது, ஹாட்ரிக் கோல் அடித்தது போன்றவை ரசிகர்களை கொண்டாட்ட நிலைக்கு கொண்டு சென்றது.

முதல் பாதியில் 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த அர்ஜென்டினா அணி, இரண்டாம் பாதியில் மேலும் 2 கோல்களை அடிக்க 7-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றிபெற்றது.

Lionel Messi 100th goal

பட மூலாதாரம், Getty Images

அடுத்தடுத்த ஆட்டங்களில் சாதனை படைத்த மெஸ்ஸி

கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற பனாமா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. நட்பு ரீதியிலான ஆட்டம் என்றாலும், உலகக் கோப்பை தொடருக்கு பிறகு அர்ஜென்டினா விளையாடும் முதல் போட்டி இது என்பதால் சர்வதேச அரங்கில் எதிர்ப்பார்ப்பு இருந்தது. மெஸ்ஸி ரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய இந்த ஆட்டத்தின் 75அவது நிமிடம் வரை கோல் அடிக்கப்படவில்லை.

77வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் மூலம் அர்ஜென்டினா முதல் கோலை அடித்தது. 88-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இந்த கோல் மூலம் சர்வதேச அரங்கில், 800 கோல்கள் (அர்ஜென்டினா ஆணி, கிளப் அணிகள் சேர்த்து) அடித்து சாதனை படைத்தார் மெஸ்ஸி. சர்வதேச அளவில், ரொனால்டோவுக்கு பிறகு இந்த பட்டியலில் அதிக கோலடித்து மெஸ்ஸி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

அந்த ஆட்டத்தில் மெஸ்ஸி அடித்த கோல் அர்ஜென்டினா அணிக்கான அவரது 99வது கோலாக இருந்தது. அன்றைய ஆட்டத்தில் அவர் 100வது கோலை அடிக்கவில்லை என்றாலும், மார்ச் 28-ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் 100வது கோல், ஹாட்ரிக் கோல்கள் என ரசிகர்களுக்கு மெஸ்ஸி விருந்து படைத்தார். அர்ஜென்டினா அணிக்காக 174 போட்டிகளில் களமிறங்கிய மெஸ்ஸி 100வது கோல் என்னும் சாதனையை எட்டியுள்ளார்.

ஆண்கள் கால்பந்தாட்டத்தில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (120 கோல்கள்), ஈரானின் அலி டேய் (109 கோல்கள்) ஆகியோர் சொந்த நாட்டு அணிக்காக அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸிக்கு முன்னால் உள்ளனர். இதில், அலி டேய் ஓய்வு பெற்றுவிட்டதால், தற்போது 102 கோல்களுடன் உள்ள மெஸ்ஸி விரைவில் அலி டேய்யை முந்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »