Press "Enter" to skip to content

ஆண்டுக்கணக்கில் மூடியே கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட துவங்குமா?….தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மக்கள் கோரிக்கை

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை பகுதியில் ஆண்டுக்கணக்கில் மூடியே கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நிர்வாக பட்டியலில்படி 100 குளங்கள் உள்ளன. இதனை பேரூராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கி பல குளங்கள் காணாமல் போனது. தற்பொழுது பேரூராட்சி பட்டியலில் 43 குளங்கள் இருந்தாலும் மக்கள் கண்ணில் படுவது 10க்கும் மேற்பட்ட குளங்கள்தான். அதிலும் ஆக்கிரமிப்பு பெருகிவிட்டதால் குளத்திற்கு வரும் தண்ணீர் தடைப்பட்டு குளங்கள் வறண்டு கிடக்கிறது. இதனால் முத்துப்பேட்டை நகரில் ஒருகாலத்தில் சுமார் 15அடி தூரத்தில் நல்ல தண்ணீர் கிடைத்த காலம் போய் தற்பொழுது பூமிக்கு அடியில் நூறு அடியில் கூட உப்பு தண்ணீர் கூட கிடைக்கவில்லை. அதனால் சென்றாண்டுகளில் முத்துப்பேட்டை நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

மேலும் தற்போது முத்துப்பேட்டைக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் விநியோகிக்கபட்டாலும், அதிலும் வரும் வழியில் அடிக்கடி குளறுபடி ஏற்படுவதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது. சில நேரங்களில் குழாயில் மக்கள் பயன்படுத்த முடியாதளவில் சாக்கடைநீர் கலந்த குடிநீர் வருகிறது. இது ஒருபுறம் என்றாலும் பல ஆண்டுகளாக பேரூராட்சிக்கு உட்பட்ட மருதங்காவெளி ஒரு பகுதி, அதேபோல் தெற்குகாடு பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்களுக்கும், பேட்டை பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கும் தற்பொழுது வரை குடிநீர் விநியோகம் இல்லை. இப்பகுதி மக்கள் தங்களது சொந்த போர்வெல் குழாய், பழமையான கிணறு ஆகியவைகளில் குடிநீர் எடுத்து வருகின்றனர். கோடைகாலத்தில் இப்பகுதி மக்கள் பல நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலையும், முடியாதவர்கள் தனியார் தண்ணீர் லாரிகளில் காசுக்கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இதனை சரி செய்யும் வகையில் மேற்படி மூன்று பகுதியிலும் குடிநீர் மேல் தேக்க தொட்டி அமைத்து அப்பகுதி மக்களுக்கு வழங்க வேண்டும் என்று பலமுறை போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனாலும் மக்களின் கோரிக்கைகள் அதிகாரிகளின் அலட்சியத்தால் செவிடன் காதில் ஊதிய சங்காக போய்வி–்ட்டது. இந்தநிலையில் அடுத்தடுத்த மாதங்களில் கோடை துவங்கும் நிலையில் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட இருக்கிறது. ஆகையால் இந்த மூன்று பகுதியிலும் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்குகாடு, செம்படவன்காடு, மருதங்காவெளி ஆகிய பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 3 பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 2013-14ம் ஆண்டில் பயனுக்கு வந்தது.

வறட்சி நிவாரண திட்டநிதியில் தலா ரூ.6 லட்சம் வீதம் மூன்றுக்கும் மொத்தம் ரூ.18லட்சம் மதிப்பீட்டில் அமைக்கபட்டு அப்போதைக்கு பயனுக்கு வந்த மூன்று கட்டடத்திலும் பிளாஸ்டிக் டேங்க், பில்டர் மற்றும் மின்மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளன. அருகருகே போர்வெல்லும் அமைக்கபட்டுள்ளது. அதிலிருந்து தண்ணீரை உறிஞ்சி சுத்திகரித்து குழாய் மூலம் பொதுமக்களுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதற்காக தனித்தனி பம்ப் ஆபரேட்டர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இப்பணியில் ஆர்வம் இல்லாததால் இந்த மூன்று குடிநீர்சுத்திகரிப்பு நிலையமும் பணியாளர்களின் அலசியதால் பயன்பாட்டில் இல்லாமல் இன்று வீணாகி வருகிறது. இந்நிலையில் தரமற்று கட்டபட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டடத்திலிருந்த படிக்கட்டுகள் உள்வாங்கின. தாங்குபில்லர்களிலும் தெரிப்பு ஏற்பட்டு உள்வாங்கின. மின்மோட்டார்களும் அடிக்கடி பழுதடைந்தது இதனால் பயனுக்கு வந்த சில வாரங்களிலேயே சுத்திகரிப்பு நிலையங்கள் மூன்றும் அடுத்தடுத்து மூடப்பட்டு விட்டன.

மேலும் இதில் உள்ள பொருட்களும் போதிய பாதுக்காப்பு இல்லாமல் உள்ளதால் இவைகள் திருட்டு போகவும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் ரூ18லட்சம் திட்ட மதிப்பீட்டில் பயனுக்கு வந்த கட்டடத்திலிருந்து குடிநீர் பெற வழியின்றி இப்பகுதியினர் தவிப்பில் உள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் எடுத்து கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் தற்பொழுது கடும் வெயில் துவங்கியுள்ளது. அடுத்தடுத்து மாதங்களில் கோடை வெயிலும் துவங்க இருக்கிறது. இதன் மூலம் விரைவில் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்படும் பெரியளவில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆகையால் மொத்த முத்துப்பேட்டைக்கும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு வரும் முன் தற்பொழுது இதில் உள்ள மிஷின்கள் பொருட்கள் ஆகியவைகள் நல்லநிலையில் இருப்பதோடு இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் சீர்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »