Press "Enter" to skip to content

தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா: கோபுரத்தின் மேல் கும்பகலசம் பொருத்தும் பணி நிறைவு

தஞ்சை: தங்க முலாம் பூசப்பட்ட கலசம் கோபுரத்தின் மேலே கொண்டு செல்லப்பட்டது. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான திருப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. மேலும் யாகசாலை, பூஜைக்காக பந்தல் அமைக்கும் பணியும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. திருப்பணிக்காக பெருவுடையார் சன்னதியில் உள்ள 216 அடி உயரமுள்ள மூலவர் கோபுரத்தில் இருந்த கலசம் கடந்த 5ம் தேதி கழற்றப்பட்டு கீழே கொண்டுவரப்பட்டது. அதேபோல் மற்ற சன்னதி கோபுரங்கள், கலசங்கள் அனைத்தும் திருச்சுற்று மாளிகையில் வைக்கப்பட்டு தங்க முலாம் பூசும் பணி கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்தது. தங்க முலாம் பூசப்பட்ட இந்த கலசமானது மீண்டும்  கோபுரத்தின் மீது பொருத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கோபுரத்துடன் கலசத்தை பொருத்தும் பணியும் தொடங்கியது.

இதையடுத்து, தஞ்சை பெரிய கோயில் கும்பகலசத்திற்கு பல்வேறு கட்ட சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு அவை கோபுரத்தின் மீது பொருத்தப்பட்டது. பிரமாண்டமான கோபுர கலசம் 9 பாகங்களாக பிரிக்கப்பட்டு கயிறு கட்டி கோபுரத்தின் மீது ஒவ்வொன்றாக ஏற்றப்பட்டது. அங்கு 9 பாகங்களிலும், 400 கிலோ வரகு தானியம் நிரப்பப்பட்டு ஒன்றாக பொறுத்தப்படுகிறது. கோபுரத்தின் மேலே பொருத்தப்பட்ட கலசம் 12அடி உயரம் கொண்டவையாகும். இதனை தொடர்ந்து, முதன்மை கோபுரத்தில் கலசம் பொருத்தும் பணிகள் முடிந்தவுடன் முருகன், பெரிய நாயகி அம்மன், வராகி, தர்சணாமூர்த்தி, விநாயகர், சண்டிகேஸ்வரர், கருவோரர் ஆகிய சன்னதியில் உள்ள கோபுரங்களில் கலசங்கள் பொருத்தும் பணிகள் தொடங்கும். இந்த கலசங்கள் எல்லாம் அதன் தொன்மை மாறாமல் பொருத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »